தமிழில் பல படங்களில் நடித்தவர் வனிதா விஜயகுமார். தமிழில் மூன்று தலைமுறை நடிகராக உள்ள சீனியர் நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள். இவரது தங்கைகள் ப்ரீத்தா விஜயகுமார் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார். வனிதா விஜயகுமார் மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றவர்.
இதுவரை 3 திருமணங்கள் செய்துள்ள நடிகை வனிதா விஜயகுமார், 4வது திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக சில தினங்களுக்கு முன் தகவல் பரவியது. இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டருடன் உள்ள புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ராபர்ட் மாஸ்டரை வனிதா திருமணம் செய்துக்கொள்வார் என்ற பரபரப்பு எழுந்தது.
ராபர்ட் மாஸ்டர், வனிதா விஜயகுமாரின் முன்னாள் காதலர் என்ற நிலையில் அவர் முன்பு மண்டியிட்ட நிலையில் அமர்ந்து ராபர்ட் மாஸ்டரின் கைகளை பிடித்தபடி புரபோஸ் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை தனது வலைதள பக்கத்தில் வனிதா விஜயகுமார் வெளியிட்டு இருந்ததும், ஏற்கனவே அவர் பலமுறை நான் 4வது திருமணத்துக்கு ரெடி என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த புகைப்படத்துக்கு கீழ், அக்டோபர் 5ம் தேதியை சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள், தரையில் பேசுனதெல்லாம் திரையில் வரப்போகுது அக்காவ் என்றும் அவர் பதிவிட்டு இருந்தது, இருவரும் திருமணம் செய்யும் தகவலாக தான் இருக்கும் என்று ரசிகர்களும், அதை பார்த்தவர்களும் கருதினர். இந்த சூழலில் வனிதா விஜயகுமார் குறிப்பிட்ட அக்டோபர் 5ம் தேதியான நேற்று இதற்கான பதில் கிடைத்துள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார் புதிதாக தயாரித்து இயக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்தின் பிரமோசனுக்காக தான் இப்படி ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அந்த படத்தின் பிரமோ வீடியோவை தனது யூடியூப் சேனலில் அவர் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளராக வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா செயல்படுகிறார்.
இதுகுறித்து வனிதா விஜயகுமார் கூறுகையில், எனது வரவிருக்கும் திரைப்படத்தின் விளம்பர வீடியோவை பகிர்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகள் அனைவரின் அசைக்க முடியாத ஆதரவு இல்லாமல் இந்த தருணம் சாத்தியம் இல்லை. இந்த பயணத்தில் என்னுடன் நின்றதற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நீங்களும் வீடியோவை பார்க்க விரும்புவீர்கள் என்று நம்புகிறேன் என்று அதில் வனிதா விஜயகுமார் பதிவிட்டுள்ளார்.





