நடிகர் சூர்யா கடைசியாக வெள்ளித்திரையில் தோன்றிய திரைப்படம் விக்ரம். ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் வெறும் பத்தே நிமிடங்கள் மட்டும் வந்திருந்தாலும், படத்திற்கான ஒட்டுமொத்த பார்வையும் அவர் மீது திரும்பியது. இதற்குக் காரணம் அந்த கதாபாத்திரம் எழுதப்பட்ட நோக்கம் தான்.
கடைசி பத்து நிமிடங்களில் சூர்யாவுக்கு என மாஸ் டயலாக்குகள் வைத்து, அதை காட்சி வழியாக ரசிகர்களுக்கு கடத்தி கெத்து காட்டினார் லோகேஷ் கனகராஜ். ஒரு குரூரமான வில்லன் எப்படி இருப்பானோ அதற்கு ஏற்ற உடல் அமைப்பையும் சூர்யா தனக்குள் கொண்டு வந்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டினார்.
ஆனால் இந்த திரைப்படத்திற்குப் பிறகு அவருக்கு எந்த ஒரு திரைப்படமும் இதுவரை வெளியாகவில்லை என்பதுதான் இங்கு சோகம். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்த திரைப்படம் வெளியான நிலையில், இரண்டு ஆண்டுகளாக சூர்யா படம் எதுவும் திரையரங்குகளை எட்டி பார்க்கவில்லை.
இதற்கு முக்கிய காரணம் அவரது கங்குவா திரைப்படம் தான். சிறுத்தை சிவா இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்திற்காக, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் படப்பிடிப்பில் மட்டும் செலவழித்தார் சூர்யா. அதுவும் 10 மொழிகளில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
வரும் நவம்பர் மாதம் இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்குப் பிறகு சுதா கொங்கரா படத்தில் நடிக்க இருந்த சூர்யா, கடைசி நேரத்தில் தனது முடிவை மாட்டி விட்டார். பிறகு தனது 44 வது திரைப்படத்திற்காக அவர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்தார். கடந்த ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கியது.
சூர்யா கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்தமான் கோவா உள்ளிட்ட பகுதிகளில் இதன் சூட்டிங் நடத்தப்பட்ட சூழலில், வெறும் நான்கே மாதங்களில் இதற்கான படப்பிடிப்பை கார்த்திக் சுப்பராஜ் முடித்திருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவும் சூட்டிங் ஸ்பாட்டில் புகைப்படம் எடுத்து இதனை அறிவித்துள்ளது. அனேகமாக பொங்கலுக்கு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





