அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் மாபெரும் வெற்றியடைந்தது. அந்தப் படத்துக்கு போட்டியாக களமிறங்கிய வாரிசு படம் விமர்சன ரீதியாக அடி வாங்க துணிவு ரியல் பொங்கல் வின்னராக மாறியது. எப்போதும் ஒரு படத்தை முடித்து அடுத்த படத்தில் கமிட்டாகும் அஜித் தனது 62ஆவது படத்தில் மட்டும் துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வேக வேகமாக கமிட்டானார். அதற்கான அறிவிப்பும் வெளியானது.
ஆனால் எவ்வளவு வேகமாக கமிட்டானாரோ அதற்கு பிறகு படம் டேக் ஆஃப் ரொம்பவே ஸ்லோ ஆனது. விக்னேஷ் சிவன் வெளியேற மகிழ் திருமேனி உள்ளே வந்தார். படத்துக்கு அஜித் பிறந்தநாளான மே 1ஆம் தேதி விடாமுயற்சி என்று பெயர் அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை. அஜித்தோ பைக்கை எடுத்துக்கு உலகம் சுற்ற கிளம்பிவிட்டார்.
இதற்கிடையே லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறையினரின் சோதனை நடந்தது. இதன் காரணமாக படம் மேற்கொண்டு தாமதம் ஆனது. அதேசமயம் லைகா பேனரில் தயாராகும் மற்ற படங்கள் குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகின. இதனால் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சியை நினைத்து விரக்தியடைந்தனர். மேலும் விடாமுயற்சி கைவிடப்பட்டதாகவும் ஒரு தகவல் பரவியது.
அதேசமயம் அதெல்லாம் இல்லை அஜித்துக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுக்கப்பட்டாச்சு. எனவே பட ட்ராப்புக்கான பேச்சே இல்லை என்று கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்டோர் அஜர்பைஜான் நாட்டுக்கு சென்றதாக ஒரு புகைப்படம் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக த்ரிஷாவும் அஜர்பைஜான் கொடி படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
எனவே விடாமுயற்சியில் த்ரிஷா கமிட்டாகியிருப்பதும் அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பித்திருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. முதலில் அங்கு சில காட்சிகளை எடுத்துவிட்டு பிறகு அபுதாபி, துபாய், சென்னை என ஷெட்யூலை மகிழ் திருமேனி திட்டமிட்டிருக்கிறாராம். மேலும் இதில் சஞ்சய் தத், ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி விடாமுயற்சிக்கு அனுவர்தன் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றுவதாகவும் ஃபைட் மாஸ்டராக சுப்ரீம் சுந்தர் பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது. அனுவர்தன் காஸ்ட்யூம் டிசைனர் என்பதால் பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் அஜித் எவ்வளவு ஸ்டைலிஷாக இருந்தாரோ அதேபோல் இதில் இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். படம் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாவது குறிப்பிடத்தக்கது.





