கடந்த 1990களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா என்ற படத்தில் அறிமுகமான அரவிந்த்சாமி மின்சார கனவு, பம்பாய், தளபதி, மறுபடியும், இந்திரா, தேவராகம், என் சுவாசக் காற்றே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அரவிந்தசாமி போல் அழகான மாப்பிள்ளை வேண்டும் என்பது 1990களில் பெண் வீட்டாரின் முக்கிய கோரிக்கையில் ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு அழகான, மிக இளமையான தோற்றத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அரவிந்த் சாமி என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் அரவிந்த் சாமி நடிக்கத் துவங்கினார். அவர் தனது 2வது சுற்றில் கடல், பாஸ்கர் ஒரு ராஸ்கல், தனி ஒருவன், போகன், தலைவி, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் அரவிந்த்சாமி நடித்திருந்தார். தொடர்ந்து அதிக படங்களில் நடிக்காமல், அவ்வப்போது படங்களை தேர்வு செய்து தனக்கு பிடித்தமான கேரக்டரில் மட்டுமே அரவிந்த்சாமி நடித்து வருகிறார்.
தற்போது 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் உருவான மெய்யழகன் படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி இணைந்து நடித்துள்ளனர், இந்த படம் கடந்த 27ம் தேதி வெளியானது. 96 படம் இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ராஜ்கிரண் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது.
இதில் கலந்துகொண்ட நடிகர் அரவிந்த்சாமி பேசியதாவது, நான் பணி செய்த படங்களிலேயே மறக்க முடியாத படங்களில் மெய்யழகன் படமும் ஒன்று. அதற்கு படக்குழுவினருக்கு நன்றி. இந்த படம் வெளியாகும் போது நான் தமிழ்நாட்டில் இல்லை, வெளிநாட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. வெளிநாட்டில் இருந்தாலும் கார்த்தி, இயக்குனர் பிரேம்குமார், ராஜசேகர் ஆகியோருடன் தொலைபேசியில் அவ்வப்போது படம் குறித்து பேசிக்கொள்வேன்.
படத்தில் எனது நடிப்பை பாராட்டியதை விட கார்த்தி நடிப்பை பாராட்டியதுதான் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. இயக்குனர் என்ன விரும்பினாரோ அதை சிறிதும் மாற்றாமல் அந்த கதாபாத்திரங்களை அப்படியே வெளிப்படுத்த நானும் கார்த்தியும் மற்றவர்களும் முயற்சித்தோம். படப்பிடிப்பின் நடிக்க செல்வதற்கு முன் இந்த கேரக்டர் இப்படித்தான் என மனதில் நினைத்துக் கொண்டு செல்வேன். ஆனால் அங்கே உடன் நடிக்கும் மற்றவர்களை நடிப்பை பார்த்து அதிலிருந்து சில விஷயங்களை கற்றுக் கொண்டு நடிப்பேன்.
நான் மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க வேண்டும் என நடிப்பதில்லை. நான் அதிக படங்களில் நடிப்பதும் இல்லை. நான் எந்த போட்டியிலும் இல்லை. செய்யும் வேலையை ரசித்துச் செய்ய வேண்டும். இது போன்ற ஒரு அழகான சூழலில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று அரவிந்த்சாமி அந்த நிகழ்ச்சியில் பேசினார்.





