நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான படம் தக்லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் 37 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் கமல் நடித்திருந்தார். நாயகன் படம் போல இதுவும் ரசிகர்கள் மத்தியில் காலம் காலமாக பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் பிளாப் ஆகிவிட்டது.
இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனே தனது சொந்த தயாரிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரித்திருந்தார். 300 கோடி ரூபாய் வரை பட்ஜெட் என்றும் சொல்லப்படுகிறது. சிலம்பரசன் திரிஷா அபிராமி அசோக் செல்வன் நாசர் ஐஸ்வர்யா லட்சுமி ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.
தக்லைஃப் படம் விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கிய நிலையில், 5 நாட்களில் இந்த படத்தின் மொத்த வசூலே உலக அளவில் 46 கோடி ரூபாய் எனவும் இந்திய அளவில் 40 கோடி ரூபாய் எனவும் சொல்லப்படுகிறது. நேற்று 5வது நாளில் தக்லைஃப் படத்தில் மொத்த வசூல் ரூ. 3.5 கோடியாக மட்டுமே இருந்துள்ளது.
பெரும்பாலான தியேட்டர்களில் 10க்கும் குறைவான ரசிகர்களே படம் பார்க்க வருவதால், காட்சிகளை குறைத்துவிட்டு வேறு படங்களை திரையிடும் சூழலுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதனால் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் படத்தின் கதாநாயகன் நடிகர் கமல்ஹாசன் ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார்.
தக்லைஃப் படம் தியேட்டரில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகுதான் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒப்பந்தம் போட்டுதான் டிஜிட்டல் ரைட்ஸ் விற்கப்பட்டது. இது நல்ல முன் உதாரணமாக இருந்து தியேட்டர் உரிமையாளர்களுக்கு நல்ல வருமானத்தை கொடுக்கும் என்று கமல்ஹாசன் இந்த நடைமுறைக்கு பிள்ளையார் சுழி போட்டார்.
ஆனால் போதாத காலமாக தக்லைஃப் படத்தை ஒருவாரம் கூட ஓட்ட முடியாது என்ற பரிதவிப்பில் தியேட்டர் உரிமையாளர்கள் கதறுகின்றனர். அதனால் 8 வாரங்கள் என்பதை குறைத்து 4 வாரங்களில் தக்லைஃப் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட கமல் முடிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் பலத்த நஷ்டமடைந்த வினியோகஸ்தர்களுக்கு தயாரிப்பாளராக கமல்ஹாசன் கொஞ்சம் கொடுத்து உதவவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.





