சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமான சிவகார்த்திகேயன், முதலில் தனது நகைச்சுவை கலந்த பேச்சை மையப்படுத்திய திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம் கொத்திப் பறவை, ரஜினி முருகன் என அவர் தேர்வு செய்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.
இதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது பாதையை மாற்றினார் சிவகார்த்திகேயன். குடும்ப ஆடியன்ஸ்களை கையில் வைத்திருந்ததால் அனைவரும் பார்க்கும்படியான ஜனரஞ்சகமான படத்தில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வந்தார். அவ்வபோது சோதனை முயற்சியாக வித்தியாசமான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டிய திரைப்படம் மாவீரன். தமிழ் சினிமாவுக்கு பழக்கப்பட்ட கதை தான் என்றாலும், அதைக் கூறிய விதம் புதுமையாக இருந்ததால் மாவீரன் திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. சிவகார்த்திகேயன் அதற்கு முன்பு நடித்த, டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடி ரூபாய் வசூல் குவித்தன.
ஆனால் மாவீரன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டவில்லை. இருப்பினும் தயாரிப்பாளர்களுக்கு லாபமிக்க திரைப்படமாகவே அது அமைந்தது. இது குறித்து பேசி இருந்த சிவகார்த்திகேயன், தான் சோதனை முயற்சியாக களம் இறங்கிய திரைப்படத்திற்கு ரசிகர்கள் இந்த அளவு வரவேற்பு கொடுத்துள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. ராணுவ வீரர் கதாபாத்திரத்தில், கட்டு மஸ்தான உடலுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறார் சிவகார்த்திகேயன். ஒரு ஆக்சன் ஹீரோவுக்கே உண்டான அனைத்து உடல் மொழிகளையும் அவர் கொண்டு வந்திருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.
கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு 31ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் அமரன் திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா, நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிலம்பரசன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயன் பட நிகழ்ச்சிக்கு சிம்பு கலந்து கொள்ள இருப்பதாக வெளியாகி இருக்கும் இந்த தகவல் தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்.





