தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் கவிஞராக இருப்பவர் கவிப்பேரரசு வைரமுத்து. திரைப்பட பாடல் ஆசிரியராக தமிழ் சினிமாவில் பல ஆயிரம் ஹிட் பாடல்கள் கொடுத்தவர். கவிஞர் வைரமுத்து பாடல் ஆசிரியராக மட்டுமின்றி சிறந்த கதை ஆசிரியராகவும் தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.
கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் மூன்றாம் உலகப்போர் உள்ளிட்ட பல நூல்கள் பெரிய அளவில் வாசகர்களால் வரவேற்பை பெற்றவை.
இதுவரை 6 முறை சிறந்த பாடலாசிரியருக்கான மத்திய அரசின் தேசிய விருது பெற்றவர் கவிப்பேரரசு வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞர் வைரமுத்து அவ்வப்போது தனது வலைதள பக்கத்தில் கவிதைகளை பதிவிடுவது, முக்கிய தகவல்களை பதிவிடுவது, சமூகம் சார்ந்த தனது கருத்துகளை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிகிறார்.
நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடிய நிலையில், பாடலாசிரியர் வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் சில கருத்துகளை பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில் வைரமுத்து கூறியிருப்பதாவது, விழாக்கள் புதியவை அல்ல, தொழில் சார்ந்தும் பருவங்கள் சார்ந்தும் ‘விழவு மலி மூதூர்’ களை தமிழகம் சங்க காலத்திலேயே கண்டிருக்கிறது. தீபாவளி கொண்டாடுவது என்பது அவரவர் அறிவு, அவரவர் தெளிவு, அவரவர் முடிவு. ஆனால் விழாக்கள் காற்றை கொலை செய்து விடக்கூடாது. சுற்றுச்சூழலின் சுத்தத்தில் குப்பை எரியக் கூடாது.
ஒவ்வொரு தீபாவளியிலும் காற்று மாசு மற்றும் ஓசை மாசு இரண்டினாலும் சமூகத்தின் ஒரு பகுதி நோயுறுகிறது. போகிக்கும் இது பொருந்தும். அடர்த்தியான புகையினால் காற்று கவலைக்கிடமாவதாய் அறிக்கை சொல்கிறது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 190 என்று தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளது. சுவாசக் கோளாறு உள்ளவர்களும், மூச்சு முட்டும் முதியவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு பண்டிகை என்பது இறுகிக் கிடக்கும் மனத்தாழ்வுகளுக்கு எண்ணெய் இடுவதாகவும், உடைந்த உறவுகளை ஒட்ட வைப்பதாகவும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நிர்பந்த சந்தோஷமாகவும் திகழ்வதாக கருதப்படுகிறது. அவற்றை மீறி சுற்றுச்சூழலின் சுவாசக் குழாய்களில் அழுக்கு சுவர் கட்டுவது ஆபத்து.
நிகழ்கால பெருமக்கள் எதிர்காலத்தை சிந்திப்பார்களா, கொண்டாட்டம் ஒரு குற்றமாகாமல் தடுப்பார்களா, நான் உங்கள் சுதந்திரத்திற்கு எதிரியல்ல; சுவாசத்திற்கு நண்பன், இவ்வாறு வைரமுத்து கூறியிருக்கிறார். தீபாவளி கொண்டாடுங்கள் என்று சொல்கிறாரா, வேண்டாம் என்று சொல்கிறாரா என்று புரியவில்லை என்று ரசிகர்கள் இந்த பதிவு குறித்து விமர்சித்து வருகின்றனர்.





