தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழில், இந்தியில் நடிக்கும் பிரபல நடிகராக இருக்கிறார். கதாநாயகனாக மட்டுமின்றி சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.இந்தியில் வெப் சீரிஸ்களில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர். இவர் இந்தியில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இந்தி சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில் அனுபம் கெர் மிக முக்கியமானவர். இவர் பார்ப்பதற்கு ஒரு சாயலில் தேசத்தந்தை மகாத்மா காந்தி போல தெரிவார் என்று இந்தி ரசிகர்கள் குறிப்பிட்டு சொல்வார்கள்.
இந்த சூழ்நிலையில் குஜராத்தில் கள்ள நோட்டு அச்சடிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குஜராத் போலீசார் கள்ள நோட்டு அச்சடிக்கும் இடத்திற்கு சென்று நேரில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 1.60 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் போலீசாரிடம் சிக்கியது.
அந்த ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படத்துக்கு பதிலாக அனுபம் கெரின் புகைப்படம் இருந்ததை பார்த்த போலீசார் முதலில் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அந்த கள்ள நோட்டுகளில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக ரிசோல் பேங்க் ஆப் இந்தியா எனவும் அச்சிடப்பட்டிருந்தது. இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜ்தீப் நுகுன் கூறியதாவது, ஷாஹித் கபூர் நடிப்பில் வெளியான பார்சி வெப் தொடரை பார்த்துவிட்டு இப்படி கள்ள நோட்டு அடித்திருக்கிறார்கள் என்றார்.
ராஜ் மற்றும் டி கே இயக்கிய பார்சி தொடரில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் அந்த வெப் தொடரை பார்த்துதான் இந்த கும்பல் கள்ள நோட்டு அச்சடித்தது ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. முன்னதாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி சூரத்தில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த வேகத்தில் மேலும் ஒரு கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டுள்ளது.
கள்ள நோட்டில் காந்திஜிக்கு பதிலாக தன் புகைப்படம் இருப்பது குறித்து செய்தியறிந்த அனுபம் கெர் அதிர்ச்சி அடைந்தார். கள்ள நோட்டு குறித்து வீடியோவில் பேசிய நடிகர் அனுபம் கெர் கூறுகையில், 500 ரூபாய் நோட்டில் காந்திஜியின் புகைப்படத்துக்கு பதில் என் புகைப்படம், எதுவும் நடக்கும் போல என்று ஆச்சரியமாக தெரிவித்துள்ளார். பிரபல இந்தி நடிகர் புகைப்படத்தை, காந்திஜிக்கு பதிலாக அச்சடித்த கள்ள நோட்டு கும்பலின் காமெடியான செயலை பார்த்து குஜராத் போலீசார் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.





