- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயே அழைத்தாலும் அரசியலுக்கு வரமாட்டேன், கேபிஒய் பாலா குறித்து தீயாக பரவிய தகவல், அதுக்கு...

விஜயே அழைத்தாலும் அரசியலுக்கு வரமாட்டேன், கேபிஒய் பாலா குறித்து தீயாக பரவிய தகவல், அதுக்கு அவரிடம் இருந்து இப்படி ஒரு ரியாக்‌ஷனா?

- Advertisement -

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேபிஒய் பாலா. சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து ஹீரோவாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையையும் பொதுவெளியில் வெளிப்படுத்தி இருக்கிறார். மாஸ்டர் ராகவா லாரன்ஸ் அவர் ஆசையை நிறைவேற்றித் தருவதாக உறுதியும் அளித்திருக்கிறார்.

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி தந்த பிரபலம் காரணமாக கேபிஒய் பாலா என்று அழைக்கப்படும் இளைஞரான அவர், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். இதுவரை 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களை, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இலவசமாக வாங்கித் தந்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் யாரேனும் கஷ்டம் குறித்து தெரிவித்தால், அவர்களை தேடிச் சென்று உதவிகள் செய்கிறார். சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் கனமழையால் பாதிப்பு ஏற்பட்ட போது, தன்னிடம் இருந்த ரூ. 5 லட்சத்தையும் தலா 1000 ரூபாய் என பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்தார். லுங்கி, நைட்டீ, பெட்ஷீட், பிஸ்கட், வாட்டர் பாட்டில்களை மக்களுக்கு வீடு வீடாகச் சென்று வழங்கினார்.

இப்படி உதவி என கேட்பவர்களுக்கு எல்லாம் ஓடி ஓடி உதவும் கேபிஒய் பாலா, மிக சாதாரணமான குடும்பத்தை சேர்ந்தவர். வளர்ந்துவரும் ஒரு சிறுநடிகர். ஆனால் அவரது வருமானத்தில் பெரும்பகுதியை அப்படியே மற்றவர்களுக்கு உதவ ஒதுக்கி விடுவதால், அவரது தன்னலமற்ற உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் மிக குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்டார்.

இந்நிலையில் நேற்று, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வெளியானது. அதில் நடிகர் விஜயே அழைத்தாலும், நான் அரசியலுக்கு வரமாட்டேன். எனக்கு போதிய அரசியல் அறிவு இல்லாததால், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் என்னை அரசியலுக்கு அழைத்தாலும் நான் வரமாட்டேன். மற்றவர்களுக்கு நான் செய்யும் உதவிகள், என் திருமணத்துக்கு பிறகும் தொடரும் என, கேபிஒய் பாலா சொன்னதாக தகவல் வைரலானது.

இந்த பதிவை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் கேபிஒய் பாலா, இது முதல்ல கேபிஒய் பாலாவுக்கு தெரியுமா என்று கேட்டு, கிண்டலாக பதிவிட்டுள்ளார். ஆக இதன்மூலம் இப்படி ஒரு கருத்தை அவர் சொல்லவில்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். அதே நேரத்தில் சில தினங்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், கேபிஒய் பாலா இருவருமே, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையப் போவதாக, ஒரு தகவல் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்