விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கின்றன. பல்வேறு முக்கிய அம்சங்களுடன் இதன் மாநாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜர் ஆகியோருக்கு 35 அடி உயரத்தில் கட்டவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு நடுவே விஜயும் கட்டவுட்டில் இடம் பெற்று இருக்கிறார். இன்னும் மாநாட்டிற்கு இரண்டு நாட்களே இருப்பதால், தமிழகமே அதனை எதிர்பார்த்து உற்று நோக்கி காத்திருக்கிறது.
இதில் விஜய் என்ன பேசப் போகிறார், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த மாநாட்டில் விஜய் இரண்டு மணி நேரம் பேச இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, விஜய்யின் கடைசி படம் குறித்த பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இதிலிருந்து ஒரு பாடல் படமாக்கப்பட்டு விட்டது. எச் வினோத் தான் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். படத்தில் விஜய்க்கு காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.
இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ்ராஜ், நரேன், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படமாகவும் ஒரு வழக்கை துப்பறியும் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்க மாட்டார் என்பதால் ரசிகர்கள் இதனை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இப்படியான சூழலில் தான் விஜய் தனது எழுபதாவது படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது முழுக்க முழுக்க ஹீரோவை சார்ந்த கதையாக இருக்காது என்றும், கேமியோ ரோலில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் அட்லி விரும்பி கேட்டதற்கு இணங்க இதில் நடிப்பதற்கு விஜய் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் திரைத்துறை வட்டாரத்தில் பேசி கொள்கிறார்கள். இது இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றும் கூறப்படுகிறது.





