சமீபத்தில் திருப்பதி லட்டு விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு தரப்படும் லட்டு பிரசாதம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சை, பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் திருப்பதி கோவிலில் இதற்கான பரிகார பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.
இந்த சூழலில் சமீபத்தில் மெய்யழகன் பட பிரமோசனுக்காக ஐதராபாத் சென்ற நடிகர் கார்த்தி, லட்டு விவகாரத்தில் எந்த கருத்தும் சொல்ல முடியாது, அது சென்சிடிவ் விஷயம் என்று சொல்ல, அதற்கு ஆந்திர துணை முதல்வர் மற்றும் நடிகர் பவன் கல்யாண் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து கார்த்தி மன்னிப்பு கேட்டார்.
அதே போல் லட்டு விவகாரம் குறித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் சில கருத்துகளை தெரிவிக்க அதிலும் பவன் கல்யாணுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருப்பதால் அதை முடித்துவிட்டு வந்து உங்கள் கேள்விகள் அனைத்தும் பதில் சொல்கிறேன். அதுவரை என் முந்தைய பதிவுகளை பார்த்துக்கொண்டு இருங்கள் என பிரகாஷ் ராஜ், கோபமாக பவன் கல்யாணுக்கு வீடியோ அனுப்பி கூறியிருந்தார்.
அதுதவிர, பரிதாபங்கள் யூடியூப் சேனலில் திருப்பதி லட்டு குறித்து சில காமெடி வீடியோக்களை வெளியிட்டு, சர்ச்சையில் சிக்கியுள்ளனர் அந்த நிகழ்ச்சியை நடத்திய கோபி மற்றும் சுதாகர். அவர்கள் மன்னிப்பு தெரிவித்து அந்த சர்ச்சைக்குரிய அந்த வீடியோக்களை நீக்கிய போதும் அவர்கள் மீது பாஜக தரப்பில், ஆந்திரா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு விவகாரம் இப்படி விஸ்வரூபம் எடுத்த வரும் சூழலில், சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், புரட்சித் தமிழன் நடிகர் சத்யராஜை வம்பிழுத்து விமர்சித்துள்ளார். அதில், ஏம்பா முன்னெல்லாம் தமிழர்க்கு ஒரு பிரச்னை வந்தா, தம் கட்டி சவுண்டு விடுவே. அதிரடியா நாத்திகம் பேசுவே, இப்ப ஏன் சைலண்ட் ஆகிட்டே, லட்டு பத்தி கருத்து சொல்லலையா?
இப்ப நான் பான் இண்டியா நடிகர். குறிப்பா தெலுங்குல. நமக்கு எதுக்கு வம்புன்னு பம்மிட்டேன் என்று அதற்கு சத்யராஜ் பதில் சொன்னது போல் பதிவு போட்டு சத்யராஜை பயங்கரமாக விமர்சித்துள்ளார் ப்ளு சட்டை மாறன். அதாவது பாகுபலி, கூலி என பான் இந்தியா படங்களில் சத்யராஜ் நடிப்பதால் எதற்கு பிற மாநில பிரச்னைகளில் தலையிட்டு, பேரை கெடுத்துக்கணும், வருமானத்தை தடுக்கணும் என்று முன் எச்சரிக்கையாக லட்டு விவகாரத்தில் சத்யராஜ் அமைதி காப்பதை ப்ளு சட்டை மாறன் விளாசி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





