சினிமாவில் எப்போதுமே வில்லன் நடிகர்களுக்கு என தனியான ஒரு இமேஜ் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என எந்த மொழி படமாக இருந்தாலும் வில்லன் இருந்தால்தான் அந்த படம் ரசிகர்களுக்கு சுவாரசியமாகவும் இருக்கும். அடுத்தடுத்த காட்சிகளை பார்க்க விறுவிறுப்பாகவும் இருக்கும்.
ஒரு கதாநாயகனை அதிக ஹீரோயிசம் நிறைந்தவனாக காட்ட உதவுவதே வில்லன் கேரக்டர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் வில்லன் நடிப்பில் நம்பியார், பிஎஸ் சக்ரபாணி, அசோகன், பிறகு சத்யராஜ், நாசர், ரகுவரன் உள்ளிட்டோரின் வில்லன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது நடிகர் விஜயின் வில்லன் நடிப்பு கூட இதை தி கோட் படத்தில், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் வில்லன் நடிகர்களை பலரும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும் ஒரு தரப்பினர் அவர்களை வெறுக்கவே செய்கின்றனர்.
சமீப காலமாக புதிய படங்கள் வெளியாகும் போது அதற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிர ஆர்வம் காட்டுகின்றனர். அந்தந்த ஊர்களுக்கு சென்று ரசிகர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து படம் குறித்த விளம்பரப்படுத்துவது என்பது நடந்து வருகிறது. அதேபோல் தியேட்டர்களுக்கு நேரடியாக சென்று ரசிகர்களை சந்திப்பதும் அடிக்கடி நடக்கிறது.
தெலுங்கில் கடந்த வாரம் வெளியான படம் லவ் ரெட்டி. அந்த படத்தில் வில்லனாக என்டி ராமசாமி என்பவர் நடித்திருந்தார். இது காதலை மையமாகக் கொண்ட ஒரு படமாகும். இந்த படத்தில் அஞ்சன் ராமச்சந்திரா, ஷ்ரவானி கிருஷ்ணவேணி ஆகியோர் காதல் ஜோடியாக நடித்திருக்கின்றனர். அவர்களை இந்த படத்தில் வில்லனாக நடித்த ராமசாமி பிரித்து விடுவதுபோல் தான் கதை.
இந்நிலையில் லவ் ரெட்டி படக்குழுவினர், அந்த படம் ஓடிய ஒரு தியேட்டருக்கு பிரமோசனுக்காக சென்றுள்ளனர். படம் முடிந்தபின் தியேட்டருக்குள் சென்று அவர்கள் மேடையில் நின்றிருந்தனர். அப்போது படம் குறித்து ரசிகர்கள் மத்தியில், நடிகர் நடிகைகள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது படம் பார்த்துவிட்டு அங்கிருந்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர், திடீரென மேடை ஏறி வந்து வில்லன் நடிகர் ராமசாமியின் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி அடைந்தார். படக்குழுவினர் அவரை தடுத்தும் மீண்டும் எகிறிக் குதித்து வந்து, நடிகர் ராமசாமியை மீண்டும் அடித்தார்.
அதனால் மேடையில் நின்றிருந்தவர்களும் படம் பார்த்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண்மணியை தடுக்க முடியாமல் படக்குழுவினர் தடுமாறி திணறினர். பின் ஒருவழியாக அங்கிருந்து வெளியேறினர். அந்த வீடியோ காட்சி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது அந்த வில்லன் நடிகரின் நடிப்புக்கு கிடைத்த வெற்றி என சிலர் பெருமையாக சொன்னாலும், பொது இடத்தில் பல பேர் முன்னிலையில் ஒரு பெண்ணிடம் அடி வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் தியேட்டர்களுக்கு விசிட் செல்லும் வில்லன் நடிகர்கள், ரசிகர்களிடம் அடி வாங்காமல் தப்பித்து வருவதே பெரும்பாடாக இருக்கும் என்று பலரும் கலாய்த்து வருகின்றனர்.





