விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள விசாலை கிராமம் காலை முதல் திருவிழா கோலம் பூண்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாரை சாரையாக, கூட்டம் கூட்டமாக, கும்பல் கும்பலாக வரும் விஜய் ரசிகர்கள், கட்சியினர் கூட்டத்தால் விசாலை கிராமமே பண்டிகை பகுதியாக மாறியிருக்கிறது.
இன்று மாலை 4 மணிக்கு தான் அரசியல் மாநாடு துவங்கும் என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருந்த நிலையில், நேற்று மதியமே விசாலை பகுதியில் கட்சியினரும், தொண்டர்களும், மக்களும் குவிய ஆரம்பித்து விட்டனர். நேற்று இரவு முழுவதும் படையெடுத்த மக்கள் கூட்டத்தால், விசாலை பகுதியே மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
இன்று காலை 6 மணி அளவில் மாநாட்டு திடல் பகுதிக்குள் தடைகளை உடைத்துக் கொண்டு புகுந்த மக்கள் கூட்டம் இருக்கைகளை முண்டியடித்து பிடித்து அமர்ந்துக்கொண்டது. காலை 6 மணிக்கே மாநாடு திடல் பகுதியில் கூட்டம் திரண்டு, மேடை பகுதியின் முன்பகுதியில் உள்ள ஏராளமான இருக்கைகளை பிடித்துக்கொண்டதால், அடுத்து வருபவர்களுக்கு பின்புறம் இருந்த பகுதிகளில்தான் அமர இடம் கிடைக்கும் நிலை ஏற்பட்டது.
மாநாட்டு தினத்தன்று மழை பெய்தால் என்ன செய்வது என்று கட்சியினரும், தொண்டர்களும் கட்சி மூத்த நிர்வாகிகளும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், கண்டிப்பாக இன்று மழை பெய்யாது என்ற சூழ்நிலையில் விசாலை கிராமப் பகுதியில் வானிலை நிலவரம் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் மழையைக் காட்டிலும் இப்போது அந்த பகுதியில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
மாநாடு பகுதியில் விசாலை பகுதியில் இப்போத 35 டிகிரி வெயில் கொளுத்தி வரும் நிலையில், விஜயை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காலை 6 மணிக்கே மாநாட்டு திடல் பகுதியில் வந்த மக்கள் கூட்டம், இப்போது சுட்டெரிக்கும் வெயிலில் தவித்து வருகிறது. உடலில் உள்ள நீச்சத்து வெகுவாக குறைந்த நிலையில் பலருக்கும் போதிய குடிநீர் கிடைக்காத நிலையிலும் இதுவரை ஒரு ஆண் போலீஸ்காரர், ஒரு பெண் போலீஸ் உட்பட 85 பேர் இதுவரை மயக்கமடைந்துள்ளனர்.
மயக்கம் அடைந்தவர்களுக்கு அங்குள்ள மருத்துவ முகாம்களில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும் அடுத்த கட்ட சிகிச்சைக்கு அவர்களை விக்கிரவாண்டிக்கோ, விழுப்புரத்துகோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றால், ஆம்புலன்ஸ் செல்ல முடியாத அளவுக்கு பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியாக காணப்படுகிறது. மழையால் பாதிப்பு வருமோ என்று பயந்த கட்சியினருக்கு இப்போது சுட்டெரிக்கும் வெயில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.





