தீபாவளி பண்டிகை நாளில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன், ஜெயம் ரவி நடித்த பிரதர், கவின் நடித்த பிளடி பெக்கர் ஆகிய தமிழ் படங்களுடன் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் என்ற படமும் வெளியானது. இந்த 4 படங்களில் 2 படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் படத்துக்கு ரசிகர் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்த நிலையில், பிரதர் மற்றும் பிளடி பெக்கர் படங்களுக்கு ரசிகர் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. தீபாவளி பண்டிகை கால படங்களாகவே இது தேறவில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.
அதே நேரத்தில் மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் தெலுங்கு படத்துக்கு அபரிமிதமான வரவேற்பு தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் கிடைத்து வருகிறது. தமிழில் ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓகே கண்மணி, சீதாராமம், நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்களில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.
இப்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார். இவர் தி கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ராம்கி நடித்திருக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி, நடிகர் தனுஷ் நடித்த வாத்தி படத்தை இயக்கிய இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை, பாசிடிவ் விமர்சனத்தை லக்கி பாஸ்கர் படம் பெற்றுள்ளது. இதற்கிடையே உலகம் முழுவதும் 3 நாட்களில் லக்கி பாஸ்கர் படம் ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. அதேபோல் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் படமும் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்திய ராணுவத்தில் நாட்டிற்காக உயர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அமரன் படம் எடுக்கப்பட்டுள்ளது.
அமரன் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமல்ஹாசன் சொந்தமாக தயாரித்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார் இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். அதேபோல் லக்கி பாஸ்கர் படத்துக்கும் இசையமைத்தது ஜீவி பிரகாஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அமரன் படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் 104 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த எந்த படமும் 3 நாட்களில் ரூ. 100 கோடியை கடந்தது இல்லை. இதுவே முதல் முறை என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.





