ரங்கூன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. அவரது முதல் படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது.
ரங்கூன் படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான படம் அமரன். தீபாவளியன்று வெளியான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியான 3 நாட்களில் ரூ. 104 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில், வெளியான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்தது அமரன் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியால், தமிழ் சினிமா பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை சிவகார்த்திகேயன் துவங்கியிருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் முகுந்த் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக முகுந்த் வரதராஜன் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கேரக்டரில் நடித்துள்ள சாய் பல்லவிக்கு இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.
இந்நிலையில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்து இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பாலிவுட் படத்தை அடுத்து அவர் இயக்க உள்ளார். நடிகர் அமீர்கான் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தை அவர் இயக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தில் அமீர்கான் நாயகனாக நடிப்பாரா, அல்லது வேறு நடிகர் ஹீரோவாக நடிக்கிறாரா என்பது உறுதியாகவில்லை.
ஆனால் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. அமரன் படம் தந்த அபார வெற்றிக்கு பிறகு சாய்பல்லவி இந்த படத்தில், அதே இயக்குனர் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியில் சில படங்களில் சாய்பல்லவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.





