“இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தற்போது படக்குழுவினர் அடுத்தக்கட்ட பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க, “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.

“விடாமுயற்சி” திரைப்படத்தின் அறிவுப்பு மே மாதம் வெளிவந்தது. ஆனால் அதன் பின் அத்திரைப்படம் குறித்தான எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை. அஜித்தின் போட்டி நடிகரான விஜய், “லியோ” ஷூட்டிங்கை முடித்துவிட்டு தற்போது “தளபதி 68” திரைப்படத்திற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். இவ்வாறு விஜய் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறார். இதனால் அஜித் ரசிகர்கள் மனம் கலங்கிப்போய் உள்ளனர்.
“விடாமுயற்சி” திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. லைகா நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை நடந்தது. ஆதலால் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகியுள்ளதாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து மகிழ் திருமேனி, “விடாமுயற்சி” திரைப்படத்தில் யார் யாரெல்லாம் நடிக்க வைக்கலாம் என்ற பட்டியலை தயார் செய்து லைகா நிறுவனத்திற்கு கொண்டு சென்றுள்ளாராம். ஆனால் லைகா நிறுவனத்தின் தமிழ்நாடு மேலாளரான தமிழ் குமரன் “இந்தியன் 2” பட வேலைகளுக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். அவர் இந்த மாத இறுதியில்தான் தமிழகத்திற்கு திரும்புவாராம். ஆதலால் அந்த நடிகர் பட்டியல் லைகா நிறுவனத்தின் டேபிளிலேயே இருக்கிறதாம்.
ஏற்கனவே “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்காதது குறித்து ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம். இந்த நிலையில் “இந்தியன் 2” பணிகளில் லைகா நிறுவனம் தீவிரமாக இருப்பதால் இன்னும் பல நாட்கள் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என்று ரசிகர்கள் கவலையுடன் இருக்கின்றனராம்.





