தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். பாடகராக, தயாரிப்பாளராக, இயக்குனராக இப்போது தனுஷ் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் 50வது படமாக வெளிவந்த ராயன், பெரிய வெற்றியை பெற்றது. இது தனுஷ் இயக்கத்தில் வெளியான 2வது படமாகும். முதல் படமாக ப பாண்டி படத்தை இயக்கி இருந்தார்.
ராயன் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 3வது படமாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் வரும் டிசம்பரில் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷின் நடிப்பில் 52வது படமாக, அவரது இயக்கத்தில் 4வது படமாக இட்லிக்கடை படம் உருவாகி வருகிறது.
தேனி மாவட்டத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இட்லி கடை படப்பிடிப்பு இரண்டாம் கட்டமாக தொடர்ந்து திண்டுக்கல், மதுரை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக ஜப்பான் அல்லது தாய்லாந்து, சிங்கப்பூர் நாட்டில் இதன் படப்பிடிப்பு நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கிய குபேரா படம், இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் 2 பாகங்களாக உருவாகும் நிலையில், தனுஷ் நடிக்கிறார். மேலும் ஹாலிவுட் படம் ஒன்றிலும் தனுஷ் நடிக்க உள்ளார். இத்தனை லைன் அப்கள் உள்ள நிலையில் இப்போது அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க கமிட் ஆன தகவல் சமீபத்தில் வெளியானது.
ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு பிஸியாக ஷெட்யூல்களில் உள்ள நடிகர் தனுஷ், அமரன் படம் வெற்றியை தொடர்ந்து உடனே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க முன்னுரிமை தந்து கமிட் ஆனதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி பட இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கும் ஒரு படத்தில், தயாரிப்பாளர் மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க தனுஷ் ஏற்கனவே கமிட் ஆகியிருந்தார்.
ஆனால் செல்லா அய்யாவு சொன்ன கதையில் நடிகர் தனுஷ் நிறைய மாற்றங்களும் திருத்தங்களும் சொல்லிக்கொண்டே இருந்ததால், ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய், தனுஷ் படத்தை இயக்கும் முடிவில் இருந்து செல்லா அய்யாவு விலகி விட்டார், மீண்டும் விஷ்ணு விஷாலிடமே அவர் சென்று அவரது படத்தை மீண்டும் இயக்க ஆயத்தமாகி விட்டார். இப்போது செல்லா அய்யாவுக்கு கொடுத்த கால்ஷீட்டில்தான், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்கிற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





