சமீபத்தில் வெளியாக ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பெரிய அளவில் வெற்றியடைந்த படம் லப்பர் பந்து. கிரிக்கெட்டை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவான இந்த படத்தை தமிழரசன் பச்சமுத்து என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் பிரதான கேரக்டர்களில் கெத்து தினேஷ், ஹரீஷ் கல்யாண் நடித்திருந்தனர்.
லப்பர் பந்து படம் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில், ரூ. 35 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. மேலும் இந்த படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகி ஓடிடி தளத்திலும் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. யதார்த்தமான கதையும், கதாபாத்திரங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டதால், லப்பர் பந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படமாக மாறி விட்டது.
இந்த படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, விஜயகாந்த் தீவிர ரசிகர் என்பதால் இந்த படத்தில் பூமாலை என்ற பெயிண்டர் கேரக்டரில் நடித்த கெத்து தினேஷை விஜயகாந்த் ரசிகராக அடர் காட்டியிருந்தார். தினேஷ் வீட்டில் டிவியில் விஜயகாந்த் பட பாடல்கள் ஒலிக்கும். வீட்டுச் சுவர் முழுவதும் விஜய்காந்த் புகைப்படங்கள் இருக்கும். அவரது பைக்கில் கேப்டன் படம் இருக்கும்படி செய்திருந்தார்.
அத்துடன் கிரிக்கெட் மைதானத்துக்குள் கெத்து தினேஷ் கையில் பேட்டுடன் வரும்போதும், விளையாடிவிட்டு வெளியே வரும்போதும் நீ பொட்டு வெச்ச தங்க குடம், ஊருக்கு மணிமகுடம் என்ற விஜயகாந்த் படப் பாடலை ஒலிக்கச் செய்திருப்பார். இது படத்துக்கு மிகப்பெரிய மாஸ் காட்டியிருந்தது.
இப்போது விஜயகாந்த் மகன் நடித்துள்ள படைத்தலைவன் என்ற படத்தில், ஒரு ஆக்ரோஷமான சண்டைக்காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த சண்டை காட்சியிலும் நீ பொட்டு வெச்ச தங்க குடம் என்ற பாடல், பின்னணியாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அது லப்பர் பந்து படம் வெளிவருவதற்கு முன்பே அது செய்யப்பட்டு விட்டது. அந்த படத்துக்கு இளையராஜாதான் இசையமைப்பாளர் என்பதால் அதை யாரிடமும் தெரிவிக்காமல் செய்துள்ளனர்.
ஆனால் இப்போது லப்பர் பந்து படத்தில் அதே பாடல் இடம்பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகி விட்டதால், மீண்டும் படைத்தலைவன் படத்தில் அதே பாடல் வந்தால், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ரிபீட் ஆக தெரியும். லப்பர் பந்து படத்தை பார்த்து காப்பியடித்தது போலாகிவிடும் என்பதால் படக்குழுவினர் என்ன செய்வதென்று குழப்பத்தில் உள்ளனர். இதற்கு இளையராஜாவே ஒரு தீர்வு சொல்லட்டும் என்று அவரிடம் இதற்கான முடிவை கேட்க படக்குழு திட்டமிட்டுள்ளது.





