கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். கதையின் நாயகியாக இந்த படத்தில் கோகிலா என்ற கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தார். ஹீரோ இல்லாத இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அனிருத் இசை, யோகிபாபு காமெடி படத்துக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
அடுத்து நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்த டாக்டர் படமும் பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு விஜய் நடித்த பீஸ்ட் படத்தையும் நெல்சன் இயக்கினார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாக விஜய் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் தந்தது.
இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கினார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்தது. ரஜினிக்கு மீண்டும் ஒரு பாட்ஷா என்று சொல்லும் அளவுக்கு படம் ரூ. 550 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டில் ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படமும் உருவாகிறது.
இந்நிலையில் தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த நெருங்கிய நண்பர் சிவபாலன் இயக்கத்தில், நடிகர் கவின் நடித்த பிளடி பெக்கர் படத்தை நெல்சன் சொந்தமாக தயாரித்தார். தனது பிலமென்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் தயாரித்த இந்த படம், கடந்த தீபாவளியன்று வெளியாகி பெரிய தோல்வியை சந்தித்தது.
இதுதான் தயாரிப்பாளராக நெல்சன் தயாரித்த முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கவின், பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் சுனில் சுகாதா, ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ் ராஜ், அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எனினும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் பலத்த தோல்வியை சந்தித்தது.
கடந்த தீபாவளியன்று வெளியான பிளடி பெக்கர் படத்தை வாங்கி வினியோகித்த வகையில், பைவ் ஸ்டார் நிறுவனத்தை சேர்ந்த கதிரேசன் என்பவருக்கு ரூ. 7 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளராக நெல்சன், கதிரேசனுக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் ரூ. 5 கோடியை திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





