நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்துக்கு பிறகு இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். உபேந்திரா, நாகர்ஜூனா, சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன், ரக்சிதா ராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். இது கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தின் 2ம் பாகமாக உருவாக உள்ளது. நெல்சன் இயக்கும் இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெயிலர் 2 படப்பிடிப்பு துவங்க உள்ளது.
ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடந்து வருவது போல, அஜீத்குமார் நடிப்பில் குட்பேட் அக்லி படப்பிடிப்பும் வேகமாக நடந்து வருகிறது. துணிவு படத்துக்கு பிறகு 2 ஆண்டுகளாக அஜீத்குமார் நடித்த ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. விடாமுயற்சி படப்பிடிப்பு இன்னும் நிறைவடையவில்லை. இன்னும் ஒரு பாடல் காட்சி மீதமுள்ளது.
இந்த சூழலில் வருகிற மே 1ம் தேதி அஜீத்குமார் பிறந்த நாளில் குட்பேட் அக்லி படத்தை வெளியிட படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கிடையே விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகிவிடவும் வாய்ப்புள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் கூலி படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்டதாக சில வாரங்களுக்கு முன்பே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறினார். அதனால் வரும் பிப்ரவரிக்குள் கூலி படப்பிடிப்பை முடித்துவிட்டு கார்த்தி நடிக்க உள்ள கைதி 2 படப்பிடிப்பை துவங்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். அதே போல் அடுத்த ஆண்டில் பொன்விழா கொண்டாடும் ரஜினியும் கூலி, ஜெயிலர் 2 படங்களை 2025ம் ஆண்டிலேயே ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கிறார்.
அதனால் இப்போது அவர் நடித்து வரும் கூலி படத்தை வருகிற மே1 அல்லது மே 8ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மே 1ல் விடாமுயற்சி படமும் ரிலீஸாக உள்ளது. இதனால் ரஜினி, அஜீத்குமார் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் ஆகஸ்ட் மாதத்தில்தான் கூலி ரிலீஸாக அதிக வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஜெயிலர் 2 படம் நவம்பர், டிசம்பரில் ரிலீஸ் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.





