நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். அப்பா கஸ்தூரி ராஜா, அண்ணன் செல்வராகவன் ஆதரவுடன் சினிமாவில் நடிகராக அறிமுகமான தனுஷ், பிறகு நடிப்பில் தனக்கான முத்திரையை பதித்தார். திறமை, உழைப்பு, முயற்சியை வெளிப்படுத்தி படிப்படியாக முன்னேறினார். ஆரம்பத்தில் அவர் மீது அதிகரித்த உருவக்கேலியை கடந்து, தமிழ் சினிமாவில் ஜெயித்து காட்டினார்.
நடிகராக வெற்றி பெற்ற தனுஷ், சில படங்களில் பாடவும் செய்தார். ஒரு கட்டத்தில் சில படங்களை தயாரிக்கவும் செய்தார். பிறகு அவரே இயக்குனராகவும் மாறினார். ப பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை என அவரது இயக்கத்தில் படங்கள் உருவாகி ப பாண்டி, ராயன் ஆகிய 2 படங்கள் வெளிவந்துள்ளன. இன்னும் 2 படங்கள் வெளிவர இருக்கின்றன.
நடிகராக, பாடகராக, தயாரிப்பாளராக, இயக்குனராக தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக குபேரா படம் ரிலீஸாக உள்ளது. அடுத்து இளையராஜா பயோபிக் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். 2 பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார்.
இந்த சூழலில், இன்று நடிகை நயன்தாரா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தன்னனை பற்றிய ஆவணப் படம், நெட்பிளிக்ஸ் தளத்தில் Nayanthara Beyond the Fairy Tale என்ற பெயரில் வரும் 18ம் தேதி வெளியாக உள்ளது. இதில் நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை பயன்படுத்தியதால், அந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ், ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பலமுறை அவரிடம் என்ஓசி கேட்டும் அவர் தராததால்தான் 2 ஆண்டுகள் தாமதமாக இந்த ஆவணப்படம் வெளியாகிறது. இந்த சூழலில் கீழ்த்தரமாக அவர் ரூ. 10 கோடி கேட்பது அவரது உண்மையான முகத்தை காட்டுகிறது என்று விமர்சித்து இருந்தார். இதற்கு ஸ்ருதிஹாசன், பார்வதி, அனுபமா பரமேஸ்வரன், நஸ்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட சிலர் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
நடிகர் தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா நடித்த போதுதான் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், அவருக்கும் காதல் ஏற்பட்டது. காதலில் மூழ்கிப் போன அவர்களால் படப்பிடிப்பு பல முறை பாதிக்கப்பட்டு, ரூ. 10 கோடி வரை தயாரிப்பாளர் தனுஷூக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் படத்தையே டிராப் செய்ய தனுஷ் முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டது. அந்த சூழலில் தனுஷ், நயன்தாரா இடையே பகைமை உருவான நிலையில் தனுஷ், என்ஓசி தர மறுத்துள்ளார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.





