தமிழ் சினிமாவில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகர்களில் ஒருவராக சில காட்சிகளில் வந்தவர் விஜய் சேதுபதி. பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தார்.
பிறகு அவரது நடிப்பில் வெளியான பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பண்ணையாரும் பத்மினியும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பல படங்கள் அவரை முன்னணிக்கு கொண்டு வந்தது. இப்போது விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.
விடுதலை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படம், வருகிற டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் இளையராஜா தலைமையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, நான் 4 ஆண்டுகள் வெற்றிமாறன் என்ற பல்கலை கழகத்தில் படித்து டிகிரி வாங்கி இருக்கிறேன், என்று குறிப்பிட்டு பேசினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நட்டி, முனீஸ்காந்த், மணிகண்டன், சாச்சனா, மம்தா மோகன்தாஸ், அபிராமி, அனுராக் காஷ்யப், அருள்தாஸ், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மகாராஜா படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த ஆண்டில் வெளியான படங்களில் ரூ. 100 கோடி வசூலித்த படங்களில் மகாராஜா படமும் ஒன்றாகும். சில ஆண்டுகளாக தொடர்ந்து பிளாப் படங்களை தந்த விஜய் சேதுபதிக்கு, கம்பேக் படமாக மகாராஜா படம் அமைந்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மகாராஜா படம் 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
இந்நிலையில், கடந்த வாரத்தில் மகாராஜா படம் சீனாவில், 40 ஆயிரம் திரைகளில் வெளியானது. சீனாவில் தமிழ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், மகாராஜா படத்தையும் சீனாவில் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மகாராஜா படம் சீனாவில் வெளியான 5 நாட்களில் மொத்தம் 4.15 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.





