மாதம்பட்டி ரங்கராஜ் என்ற பெயரை கேட்டவுடன் அறுசுவையான உணவு வகைகள் தான் சட்டென ஞாபகத்துக்கு வரும். அதுவும் திருமண விழா நிகழ்ச்சிகளில், அவரது பல வகையான சைவ, அசைவ வகை விருந்து வகைகள் மனதில் தோன்றி நாவில் எச்சில் ஊற வைக்கும். பெரிய தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திர திருமண விழாக்கள் என்றாலே, அங்கு மாதம்பட்டி ரங்கராஜ் நளபாகம்தான் முன்னிலை வகிக்கிறது.
மாதம்பட்டி ரங்கராஜ், மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஏற்கனவே நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த 2019ம் ஆண்டில் வெளியானது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த படம், பெரிய அளவில் வசூலிக்கவில்லை. என்றாலும் இது ஒரு வித்யாசமான கதையாக ரசிகர்களின் மனதில் தங்கிய படமாக இருந்தது.
மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திரிபாதி, வேலராமமூர்த்தி, விக்னேஷ் காந்த் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். ஷான் ரோல்டன் படத்துக்கு இசையமைத்திருந்தார். சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியானஇந்த படத்தை விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படமாக சொல்லலாம்.
இதையடுத்து மீண்டும் தற்போது 2வது படத்தில் நடிக்க மாதம்பட்டி ரங்கராஜ் தயாராகி விட்டார். இந்த படத்தை அவரே தனது சொந்த செலவில் தயாரிக்கிறார். மெஹந்தி சர்க்கஸ் படத்தை இயக்கிய சரவண ராஜேந்திரன்தான் இந்த படத்தையும் டைரக்ட் செய்ய உள்ளார். இன்னும் 10 நாட்களில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
மெஹந்தி சர்க்கஸ் படத்தை இயக்கிய டைரக்டர் சரவண ராஜேந்திரன், இயக்குனர் ராஜூ முருகனின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. குக்கூ, ஜோக்கர், ஜப்பான் படங்களை இயக்கிய ராஜூ முருகனின் சொந்த அண்ணன்தான் சரவண ராஜேந்திரன். மெஹந்தி சர்க்கஸ் படத்தின் கதை, திரைக்கதையை ராஜூ முருகன் எழுதிய நிலையில், அதை சரவண ராஜேந்திரன் டைரக்ட் செய்திருந்தார்.
இப்போது மீண்டும் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் தயாரித்து அவரே அந்த படத்திலும் நடிக்க உள்ளார். இன்னும் படத்தின் நாயகி, இதர நடிகர் நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இந்த படத்திலும் இயக்குனர் ராஜூ முருகன் பங்களிப்பு இருக்குமா என்பதும் பின்னர்தான் தெரிய வரும். மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் 2வது படம் போல, இயக்குனர் சரவண ராஜேந்திரனுக்கும் இது 2வது படம் என்பதும் கவனிக்கத்தக்கது.





