கோலிவுட்டில் எப்போதும் நகைச்சுவை நடிகர்களுக்கு என்று ஒரு தனி அந்தஸ்து உண்டு. பழைய காவியங்களில் நாகேஷில் தொடங்கி மனோரமா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என அனைத்து கலைஞர்களுமே ரசிகர்களை வயிறு வலிக்க சிரித்து அவர்களின் மன பாரங்களை இறக்கியவர்கள். இந்த ஜாம்பவான்களின் வரிசையில் மிகத் தாமதமாக இடம்பிடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சந்தானம்.

சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்படம் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமான அவர், தனக்கே உரிய கவுன்டர் காமெடியால் படிப்படியாக உயர்ந்தார்.சச்சின், பொல்லாதவன், அறை எண் 305ல் கடவுள் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் வெளியே தெரிய ஆரம்பித்த சந்தானம், சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் ஜீவா உடன் லூட்டி அடித்து திரையரங்குகளை கலகலப்பாக்கினார்.
தீயா வேலை செய்யணும் குமாரு, தெய்வத்திருமகள், ஆம்பள, தலைவா, அலெக்ஸ் பாண்டியன், தில்லாலங்கடி, சேட்டை, பட்டத்து யானை, சிறுத்தை படங்கள் என சந்தானத்தின் அசத்தல் காமெடியை அடுக்கிக் கொண்டே போகலாம். இது மட்டுமல்லாமல் இயக்குனர் ராஜேஷ் உடன் இணைந்து அவர் பணியாற்றிய பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படங்களும் சந்தானத்தின் திரையுலக வாழ்க்கையில் மைல் கல்லாக அமைந்தன.

இதன் நடுவே தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கிய சந்தானம், கண்ணா லட்டு தின்ன ஆசையா என்னும் படத்தை ப்ரொடியூஸ் செய்தார். இதன்பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், தனது நகைச்சுவை ரோலுக்கு மூட்டை கட்டி விட்டு அதனையே முழு நேர கதாநாயகனாக எடுத்து நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ ஒன் உள்ளிட்ட திரைப்படங்கள் சந்தானத்தின் காமெடிக்கு கைகொடுக்க, அடுத்து வெளியான திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின.
இதன் நடுவே 2017ம் ஆண்டு அவர் செல்வராகவனுடன் மன்னவன் வந்தானடி என்னும் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதை கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் படத்தின் மொத்த உரிமையையும், ரேடியன்ஸ் நிறுவனத்திடம் போக சூட்டிங்கை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதன்பிறகு செல்வராகவனும் என் ஜி கே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் திரைப்படங்களை இயக்கி முடித்து விட்டார்.
இந்த சூழலில் மன்னவன் வந்தானடி திரைப்படம் குறித்து பேசி இருக்கும் நடிகர் சந்தானம், இந்த திரைப்படம் தனக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும், காதல் திரைப்படமாக இதை செல்வராகவன் உருவாக்கியதாகவும் கூறினார். 20, 30 டேக் வந்தாலும் அவர் நினைத்த காட்சியை படமாக்காமல் விடமாட்டார் என்று கூறிய அவர், இன்னும் பத்து நாட்கள்தான் படப்பிடிப்பு மிச்சம் இருப்பதாகவும், தயாரிப்பு நிறுவனம் நினைத்தால் படத்தை வெளியிட முடியும் என்றும் கூறினார். செல்வராகவன் – சந்தானம் கூட்டணி எப்படி இருக்கும் என எதிர்பார்த்திருக்கும் ரசிகர்கள், மன்னவன் வந்தானடி அப்டேட்க்காக காத்திருக்கின்றனர்.





