நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த மாதம் 14ம் தேதி வெளியான படம் கங்குவா. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் பலத்த தோல்வியை சந்தித்தது. கடுமையான விமர்சனங்களிலும் சிக்கியது. நடிகர் சூர்யா மிக சிறப்பாக நடித்திருந்தாலும் இயக்குனர் சிறுத்தை சிவா கதையில் சொதப்பியதால் படம் எடுபடாமல் பிளாப் ஆனது.
அதன்பிறகு சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 44வது படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இது காதல் கதை என்று சொல்லப்படுகிறது. பீஸ்ட் படத்திலும், தொடர்ந்து தளபதி 69 படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துவரும் நிலையில், இந்த படத்தில் சூர்யாவுக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.
தற்போது நடிகர் சூர்யா, நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா, சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மௌனம் பேசியதே, ஆறு படங்களுக்கு பிறகு 3வது முறையாக சூர்யாவுடன் இந்த படத்தில் திரிஷா இணைந்துள்ளார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு அக்ரிகல்சர் யுனிவர்சிடியில் கோவில் ஷெட் அமைக்கப்பட்டு சூர்யா 45 படப்பிடிப்பு, கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. நடிகர் சூர்யாவுடன் திரிஷா, லப்பர் பந்து நடிகை சுவாசிகா, நடிகர் நட்டி உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளில் சூர்யா நடிப்பில் வெளியான 10 படங்களும் தோல்வியடைந்த நிலையில், தனது 44 மற்றும் 45 வது படங்கள் மீது சூர்யா மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ், ஆர்ஜே பாலாஜி இருவருமே வெற்றிப் படங்களை தந்த இயக்குனர்கள் என்பதால் நிச்சயமாக சூர்யாவுக்கு கம்பேக் படங்களாக தருவார்கள் என்று ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
சூர்யா 45 படத்தில் அவர் வக்கீல் கேரக்டரில் நடிக்கிறார். ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படங்களில் சூர்யா ஏற்கனவே வக்கீலாக நடித்த நிலையில் ஜெய்பீம் வெற்றி பெற்றது. எதற்கும் துணிந்தவன் தோல்வியடைந்தது. எனினும் ஜெய்பீம் போல இந்த படத்தில் வக்கீல் கேரக்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்ற சென்டிமென்டில் சூர்யா நம்பிக்கையுடன் நடித்து வருகிறார்.





