இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை தொடர்ந்து நேற்று வெளியான படம் வாழை. இந்த படம், மாரி செல்வராஜ் சிறுவனாக இருந்த போது அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சோக சம்பவத்தை பின்னணி கொண்ட ஒரு படமாக உருவாகி உள்ளது. இந்த படம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
நேற்று முன்தினம் பிரிவ்யூ காட்சி பார்த்த இயக்குனர்கள் பாலா, ராம், மிஷ்கின், நடிகர் சூரி உள்ளிட்ட பலரும் மாரி செல்வராஜை பாராட்டினர். இயக்குனர் பாலா, மாரி செல்வராஜை முத்தமிட்டு வாழ்த்தினார். சூரி பல முத்தங்களை கொடுத்து கட்டிப்பிடித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார். இது படம் அல்ல, வாழ்க்கை படம் என்றார்.
வாழை படத்தை நடிகர்கள் கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன் என பலரும் பாராட்டி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் இந்த படம் ரூ. 1.13 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இந்நிலையில் வாழை படம் பார்த்த இயக்குனர் பாரதி ராஜாவும், இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதை தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்து மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, சினிமா துறைக்கு வந்ததே புண்ணியம் என்று சில படங்களை பார்த்த போது யோசித்தது உண்டு. வாழை அப்படி ஒரு படமாக இருந்தது. படத்தை பார்த்த போது பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனை இல்லாத முகங்கள், சுத்தம் இல்லாத தெருக்கள் என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். மண்ணில் இருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார்.
மாரி நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். சத்யஜித் ரே, ஷியாம் பெனெகல் படங்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். இப்படியான படங்களை எடுக்க தமிழனுக்கு தகுதி இல்லையோ என ஆதங்கப்படுவேன். ஆனால் இவர்களை எல்லாம் மிஞ்சுகிற வகையில் என் நண்பர் என் மாரி செல்வராஜ் அற்புதமான ஒரு படம் பண்ணியிருக்கிறான். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கான் என்று மார் தட்டி சொல்வேன், என்று அதில் கூறியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்து இயக்குனர் மாரி செல்வராஜ் செய்துள்ள பதிவில், நிறைய தருணங்கள் என்னைப் பற்றியான உங்களது சொற்களில் நின்று இளைப்பாறி இருக்கிறேன். இன்று நானே ஒரு செடியாக துளிர்க்கிறேன். இயக்குனர் இமயத்திற்கு நன்றி என்று, அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





