எதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் பெயர் போனவர் விஜய் சேதுபதி. ஒரு ரோலை அப்படியே உள்வாங்கிக் கொண்டு அதை தனக்கு ஏற்றது போல் திரை வடிவத்தில் மாற்றி, ஆரம்ப காலத்திலேயே பாராட்டைப் பெற்றவர். ஆனால் இடையே பல்வேறு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து தோல்வியிலேயே பயணித்தார்.
பிறகு ஹீரோ என்ற அடையாளத்தை மாற்றிக் கொண்டு, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் விஜய் சேதுபதி தோன்றினார். இதில் அவருக்கு வில்லன் வேடம் சரியாகவே எடுபட்டது. பேட்ட திரைப்படத்தில், கார்த்திக் சுப்புராஜ் இவரை சரியாக உபயோகப்படுத்தவில்லை என்றாலும் மாஸ்டரில் தெறிக்க விட்டிருப்பார் விஜய் சேதுபதி.
இப்படியான சூழலில், தொடர்ந்து அதுபோன்றே கதாபாத்திரம் வந்து கொண்டிருந்ததால், வில்லன் கெட் அப்பிற்கு விடை கொடுத்து இனி நடித்தால் ஹீரோ தான் என்ற முடிவுக்கு அவர் வந்தார். இப்படியான சமயத்தில்தான் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக வெளியானது மகாராஜா.
ஏற்கனவே குரங்கு பொம்மை என்னும் கண்டன்ட் திரைப்படத்தை கொடுத்து பலரையும் திரும்பி பார்க்க வைத்த நித்திலன் சுவாமிநாதன்தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். க்ரைம் திரில்லர் ஸ்டோரியாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி திரையரங்குகளில் வசூல் மழை குவித்தது.
மகாராஜா திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம் அந்த திரைப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்ட விதம்தான். சாதாரண ஒரு பழிவாங்கல் கதை தான் என்றாலும், அதை தனக்கே உண்டான எழுத்து வடிவத்தினாலும், நான் லீனியர் வெர்சனிலும் கதையாக எடுத்து நித்திலன் சுவாமிநாதன் கலக்கி இருப்பார்.
ஓ டி டி தளத்திலும் இந்த திரைப்படம் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து இருந்த நிலையில், சீனாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒரு இந்திய திரைப்படமாக மகாராஜா திரைப்படம் மொழிபெயர்க்கப்பட்டு திரையரங்குகளில் வெளியானது. கடந்த மாதம் 29ஆம் தேதி ரிலீசான இந்த திரைப்படத்திற்கு, அங்கு பெரும் வரவேற்பு கிட்டியுள்ளது. வெறும் பத்தே நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது மகாராஜா திரைப்படம். ஒட்டுமொத்தமாக மகாராஜா திரைப்படம் 164 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருப்பதாகவும், இது விரைவில் 200 கோடி ரூபாய் என்னும் மார்ஜினை எட்டும் எனவும் சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.





