நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் குஷி. இந்த படத்தை இயக்கியவர், இன்று நடிப்பு அரக்கன் என்று புகழப்படும் நடிகர் எஸ்ஜே சூர்யா தான். குஷி படத்துக்கு முன்பு எஸ்ஜே சூர்யா இயக்கிய படம் வாலி. இந்த படத்தில் அஜீத்குமார் 2 ரோல்களில் நடித்திருந்தார். அதில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக, வில்லனாக நடித்திருப்பார். அஜீத்குமாருக்கு பெரிய வெற்றியை தந்த படம் வாலி.
நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் போக்கிரி, வில்லு படங்களில் நடித்தவர் விஜய். இதில் போக்கிரி படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது. ஆனால் பிரபுதேவா நடிக்க வேண்டிய ஒரு படத்தில் அவரது கேரக்டரில் விஜய் நடித்துள்ளார். மேலும் அஜீத்குமார் படத்தை இயக்கிய இயக்குனர் படத்திலும் அதிக ஆர்வம் காட்டி நடித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் கூறியதாவது. மின்சார கண்ணா ஷூட்டிங்க்காக நாங்கள் ஸ்விட்சர்லாந்து போயிருந்தோம். ஏற்கனவே நடிகர் விஜய்க்கு நான் அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். ஸ்விட்சர்லாந்து போயிருந்த போது, நடிகர் விஜய் நான் அஜீத் நடித்த வாலி படம் பார்த்தேன். படம் சூப்பரா இருக்கு. அந்த பட டைரக்டர் எஸ்ஜே சூர்யாவை போய் பாருங்க என்று என்னிடம் சொன்னார்.
அப்புறம் வாலி படத்தை பார்த்த பிறகு நான் இயக்குனர் எஸ்ஜே சூர்யாவிடம் போனில் பேசினேன். அவர் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தயாரிப்பில் ஒரு புதிய படம் பண்றோம். ஹீரோவாக பிரபுதேவா செய்கிறார் என்று சொன்னார். ஏஎம் ரத்னம் என் நண்பர் என்பதால், அவரிடம் நான் நேரடியாக பேசினேன். அப்போது எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்று வெளிப்படையாகவே சொன்னேன். அதற்கு ஏஎம் ரத்னம் எந்த உறுதியும் சொல்லாமல், பார்க்கலாம் என்று மட்டும் கூறிவிட்டார்.
அடுத்து விடுமுறை காலம் என்பதால் ஒரு மாதம் நான் லண்டனுக்கு சென்றுவிட்டேன். நான் திரும்பி வந்து பார்த்த போது நடிகர் விஜய், இயக்குனர் எஸ்ஜே சூர்யா, தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் கூட்டணியில் குஷி படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதாவது பிரபுதேவாவை மாற்றிவிட்டு, விஜய் நடிப்பில் குஷி படத்தை எடுக்க அவர்கள் தயாராகி விட்டனர்.
அதாவது பிரபுதேவாவுக்காக கதை எழுதி, எல்லாம் தயாராகி ஷூட்டிங் போகப் போவதாக சொன்ன நிலையில், விஜய் நடிக்கும் குஷி படத்தை எடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் குஷி கதையில்தான் பிரபுதேவா நடிக்க இருந்தாரா என எனக்கு தெரியாது. ஆனால் விஜய் நடித்த படம் குஷி என்ற பெயரில் வெளியானது. நான் அதற்காக வருத்தப்படவில்லை. நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என நினைத்துக்கொண்டேன் என்று பிஎல் தேனப்பன் கூறியிருக்கிறார்.





