நடிகர் விஜய் இதுவரை 68 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது தனது 69வது படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பீஸ்ட் படத்துக்கு பிறகு 2வது முறையாக விஜய்க்கு ஜோடி சேருகிறார்.
விஜய் நடிகராக அறிமுகமான படம் நாளைய தீர்ப்பு. இந்த படத்தை அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். இந்த படம் சரியாக போகவில்லை. தொடர்ந்து ரசிகன், தேவா போன்ற படங்களில் விஜய் நடித்தாலும், அவருக்கான பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் கிடைக்கவில்லை. இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்ற அடையாளமே இருந்தது.
அதன்பிறகு செந்தூரப்பாண்டி படத்தில் கேப்டன் விஜயகாந்த் தம்பியாக விஜய் நடித்த பிறகு, ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றார். தொடர்ந்து துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, பிரண்ட்ஸ், குஷி போன்ற படங்களில் நடித்த பிறகு நடிகர் விஜய் முன்னணி நடிகராக மாறினார். இப்போது உச்ச நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் ஜொலிக்கிறார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் விஜயிடம், ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது நீங்கள் ஏன் எக்ஸ்பிரிமென்டல் படங்கள், அதாவது பரிசோதனை செய்வது போன்ற படங்களில் நடிக்கவில்லை. அதுவும் கெட்டப் சேஞ்ச் செய்து ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் நடிகர்கள் கமல், அஜீத்குமார், சியான் விக்ரம், சூர்யா போன்ற பலரும் இதுபோன்ற எக்ஸ்பிரிமென்டல் படங்களில் அதிகமாக நடித்தவர்கள், குறிப்பாக கெட்டப் சேஞ்ச் செய்து பல படங்களில் நடித்து வெற்றியும் பெற்றுள்ளனர். தோல்வியும் அடைந்துள்ளனர். ஆனால் விஜய் காதல், ஆக்சன் படங்களில் மட்டுமே இதுவரை நடித்திருப்பதால் அவரிடம் அந்த கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு நடிகர் விஜய் கூறியதாவது, உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் அந்த மாதிரி கெட்டப் எல்லாம் சேஞ்ச் பண்ணி நிறைய ஸ்டில்ஸ் எடுத்து வைத்திருக்கிறேன். என்னாலயே அதை பார்க்க முடியவில்லை. என் முகத்துக்கு எல்லாம் அது சரியாக சூட் ஆகவில்லை. எனக்கே அது திருப்தியளிக்கவில்லை. அப்படி ஒரு கதை, அந்த கேரக்டர் அந்த கெட்டப்பை டிமாண்ட் செய்தால் நான் நடிப்பேன், என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஆனால் லியோ, தி கோட் படங்களில் விஜயின் வித்யாசமான ஹேர் ஸ்டைல் அவரது ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





