தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவர் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வெயில், காதல், இம்சை அரசன் 23ம் புலிகேசி போன்ற படங்களை தயாரித்திருக்கிறார். ஜெண்டில்மேன் படம் மூலம் அறிமுகமான ஷங்கருக்கு, ஆரம்பத்தில் இருந்தே பிரமாண்ட இயக்குனர் என்ற பெயர் உண்டு.
முதல்வன் அந்நியன் ஐ காதலன் பாய்ஸ் எந்திரன் ரோபோ 2.0 சிவாஜி இந்தியன் நண்பன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் ஷங்கர். குறிப்பாக இந்தியன் படம் அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இருந்தது. இந்த படத்தில் சேனாபதி கேரக்டரில் நடித்த கமலுக்கு மத்திய அரசின் தேசிய விருது நாயகன், மூன்றாம் பிறை படங்களுக்கு பிறகு 3வது முறையாக கிடைத்தது.
இந்த ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படம் மிக மோசமான தோல்வியை தழுவியது. இந்த படத்தின் திரைக்கதை, காட்சிகள் ரசிகர்களை பலத்த ஏமாற்றமடைய செய்தது. இது ஷங்கர் படம்தானா என்று ரசிகர்கள் சந்தேகப்படும் அளவுக்கு படத்தில் பல விஷயங்கள் ரசிகர்களை பலத்த அதிர்ச்சியடைய செய்தது.
இந்நிலையில் இந்தியன் 3 படமும் வெளியாக உள்ளது. இந்த படம் ஓடிடியில் தான் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும், அப்படி ஒரு முடிவை படத்தை தயாரித்துள்ள லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் எடுத்துள்ளதாகவும் சில வார்ஙகளுக்கு முன் தகவல் பரவியது. ஆனால் சமீபத்தில் பேசிய இயக்குனர் ஷங்கர், இந்தியன் 3 தியேட்டர்களில்தால் ரிலீஸ் ஆகும் என உறுதியாக கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் அடுத்து ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா நடித்த கேம் சேஞ்சர் படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகிறது. ஜனவரி 10ம் தேதி வணங்கான், விடாமுயற்சி படங்களுக்கு மத்தியில் கேம் சேஞ்சர் படமும் வெளியாவது, ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை திரைப்படமாக உருவாக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் இதுகுறித்து பேசிய இயக்குனர் ஷங்கர், வேள்பாரி திரைக்கதையை எழுதி முடித்து விட்டேன். இந்த படத்தில் நடிக்க திடகாத்திரமான உடல் தோற்றத்தில் வீரர்களை போல கம்பீரமான நடிகர்கள் வேண்டும். பெரிய பட்ஜெட்டை தாங்கக் கூடிய தயாரிப்பாளர்கள் வேண்டும். யாராவது உடல் கம்பீரமான தோற்றத்தில் புகைப்படம் பார்த்தால், அவர்களது விவரங்களை சேகரித்து பாரி போல்டரில் போட்டு வருகிறேன். எல்லாம் முடிவானதும் அறிவிப்பாக சொல்கிறேன், என்று கூறியிருக்கிறார்.





