கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி வெளியான படம் கங்குவா. சூர்யா நடிப்பில் வெளியான இந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
மேலும் ஜெயராம் கருணாகரன் சுஜித் சங்கர் பிரகாஷ்ராஜ் நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பல மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இந்த படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. ஆனால் இதுவரை இந்த படத்துக்கு டைட்டில் வைக்கப்படவில்லை. தற்காலிகமாக சூர்யா 44 என்றே அழைத்தனர்.
இதனால் சூர்யா ரசிகர்கள் பலத்த அதிருப்தி அடைந்தனர். இதற்கிடையே கல்ட் என்றும் ஜானி என்றும் இந்த படத்துக்கு டைட்டில் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சூர்யா 44 படத்தின் டைட்டில் ரெட்ரோ என அறிவித்துள்ளனர். இதை அறிமுக வீடியோவுடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படக்குழு வெளியிட்ட 2.15 நிமிடம் ஓடும் இந்த அறிமுக வீடியோவில் குளக்கரை ஒன்றில் சூர்யாவின் கைகளில் காப்புடன் கயிறு போன்ற ஒன்றை பூஜா ஹெக்டே அணிவிக்கிறார். அப்போது அவரிடம் பேசும் சூர்யா, கோபத்தை கம்மி பண்ணுகிறேன். என் அப்பாவுடன் வேலை பார்ப்பதை விட்டுவிடுகிறேன். அடிதடி கட்டப்பஞ்சாயத்து ரவுடி தனத்தை இதோடு விட்டுவிடுகிறேன்.
இனிமேல் சிரிக்க சந்தோஷமாக இருக்க முயற்சிக்கிறேன். இனி காதல் பரிசுத்த காதல் மட்டும்தான் கட் அண்ட் ரைட்டாக சொல்கிறேன். இப்ப நீ சொல்லு கல்யாணம் பண்ணிக்கலாமா டீ என சூர்யா, அவரிடம் பேசுகிறார். இப்படி ஒரு காட்சியுடன் அந்த அறிமுக வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த காட்சியின்படி சூர்யாவின் அப்பாதான் அடிக்கடி கட்டப்பஞ்சாயத்து ரவுடித்தனம் செய்ய சூர்யாவை தூண்டுகிறார். தன் காதலிக்காக அப்பாவின் தவறான வழியை விட்டுவிட்டு காதலில் சூர்யா ஆர்வம் காட்டும் கதையாக இந்த படம் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. நிச்சயமாக இது மாறுபட்ட காதல் கதையாக இருந்து ரசிகர்களை வெகுவாக கவரும் என்பதால் இந்த அறிமுக வீடியோவை பார்த்த சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.





