இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. ஆரம்பத்தில் டிஸ்யூம் வேட்டைக்காரன் நான் அவன் இல்லை காதலில் விழுந்தேன் அங்காடி தெரு உள்ளிட்ட பல படங்களில் அவர் இசையமைத்தார். பிறகு நான் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து இப்போது முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார்.
விஜய் ஆண்டனி நடித்த படங்களில் பிச்சைக்காரன் திமிரு புடிச்சவன் படங்கள் பெரிய அளவில் வெற்றி படங்களாக இருந்தன. அதே போல் இந்தியா பாகிஸ்தான் காமெடி படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அவர் நடிக்கும் படங்களுக்கு அவரே இசையமைக்கிறார். பல படங்களை அவரே சொந்தமாகவும் தயாரித்திருக்கிறார்.
சமீபத்தில் இயக்குனர் லியோ ஜான்பால் இயக்கத்தில் வெளியான படம் மார்கன். இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து அந்த படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். திரில்லர் படமான மார்கன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்திருக்கிறது. 7 நாட்களில் இந்த படம் ரூ. 6.1 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது.
நடிகர் விஜய் ஆண்டனி, சொந்தமாக படங்கள் தயாரிப்பது தனது படங்களுக்கு மட்டும் இசையமைப்பது என்று இருந்து வந்த நிலையில், அவ்வப்போது இசை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். பிச்சைக்காரன் 2 படத்தை அவரே டைரக்ட் செய்தார். நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என இருந்து வரும் நிலையில் பலவிதமான நஷ்டங்களையும் சந்தித்து வருகிறார். இதுகுறித்து நடிகர் விஜய் ஆண்டனி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, நான் தொடர்ச்சியாக படங்கள் தயாரிப்பதை பார்த்து என்னிடம் நிறைய பணம் இருப்பதாக எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது. எல்லாமே கடன் தான். அதற்கு மாதாமாதம் வட்டியும் கட்டி வருகிறேன்.
இதுவரை நான் நடிச்ச படங்களை மட்டுமே தயாரித்திருந்தேன். இனிவரும் ஆண்டுகளில் என்னுடைய பொருளாதார நிலைமையை பார்த்து மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிப்பேன் என்று நினைக்கிறேன். அது போல இப்போது என்னுடைய படங்களுக்கு இசையமைப்பது நான்தான். இனி மற்ற மொழி படங்களுக்கும் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் நான் இசையமைக்க முடிவு செய்துள்ளேன் என்று நடிகர் விஜய் ஆண்டனி கூறியிருக்கிறார்.





