அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44-வது திரைப்படத்தில் நடித்தார் சூர்யா. ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மூலம் வெற்றியை கொடுத்திருந்ததால், இந்தக் கூட்டணி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.
இப்படியான சூழலில் சில மாதங்களுக்கு முன்பு, படத்திற்கான சூட்டிங் ஆரம்பித்து நான்கே மாதங்களில் நிறைவடைந்தது. அந்தமானில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. தொடர்ந்து கொடைக்கானல் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கும் சூட்டிங் சென்றார் சூர்யா.
இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் சூர்யா இரண்டு கெட்டப்களில் நடித்துள்ளார்.
இதில் ஒரு கெட்டப்பில் நீண்ட முடி வளர்த்து ரவுடி தோற்றத்திலும், மற்றொரு கெட்டப்பில் இளைஞர் தோற்றத்திலும் அவர் காட்சியளிக்கிறார். அவர் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான வீடியோவில், தனது அடியாட்களுடன் துப்பாக்கியை ஏந்திய படி வருவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. அப்போதே இது கேங்ஸ்டர் திரைப்படம் என்று பலரும் கூறினார்கள்.
ஆனால் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்த கார்த்திக் சுப்பராஜ், இது கேங்ஸ்டர் திரைப்படம் அல்ல, காதல் படம் என்று கூறி பலரையும் ஆச்சரியப்பட வைத்தார். படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இப்படியான சூழலில் தான், படத்தின் டீசர் உடன் சேர்ந்து தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சூர்யாவின் 44-வது திரைப்படத்திற்கு ரெட்ரோ என தலைப்பு வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். படத்தின் டீசரும் பலரையும் கவர்ந்துள்ளது. அதில், கோபத்தை விட்டுவிட்டு செயல்பட போவதாக தனது காதலி பூஜா ஹெக்டேவிடம் சூர்யா உறுதியளிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. இதற்கு பக்கபலமாக இசையமைத்து அசத்தியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். டீசர் நன்றாக இருக்கும் சூழலில், இந்த திரைப்படத்தின் மூலம் தொடர் தோல்விகளில் இருந்து சூர்யா மீள்வார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.





