தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் படப்பிடிப்புகள் நடக்காது, திரைப்படம் தயாரிப்பு சம்பந்தப்பட்ட எந்த பணிகளும் நடக்காது என, ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
ஏனெனில் முன்னணி நடிகர்கள், பிரபல நடிகர்கள் தவிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சினிமாவை நம்பி உள்ளனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரமாக சினிமா உள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள ஸ்டிரைக் அறிவிப்பு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்துடன் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் இருந்து 11 விதமான நிபந்தனைகளை விதித்தனர். உடனே அதற்கு ஓகே சொன்ன சங்க நிர்வாகிகள், ஸ்டிரைக் அறிவிப்பை வாபஸ் பெற கேட்டுக்கொண்டனர்.
முதலில் இந்த நிபந்தனைகளை உங்களது பொதுக்குழுவில் தீர்மானங்களாக நிறைவேற்றி கொண்டுவாருங்கள். அதை நாங்கள் பெப்ஸி சங்கத்துக்கு அனுப்புகிறோம். அந்த சங்கத்தின் கீழ் உள்ள அமைப்புகளும் இதற்கு சம்மதம் தெரிவித்து தீர்மாம் கொண்டு வந்து நிறைவேற்றினால், இந்த ஸ்டிரைக் விலகல் குறித்து பரிசீலிக்கிறோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
இதற்கிடையே, தயாரிப்பாளர் ஸ்டிரைக் அறிவிப்புக்கு பின்னால் ஆளுங்கட்சியான திமுகவின் அழுத்தம் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இப்போது தி கோட் படத்தை முடித்துள்ள நடிகர் விஜய், அடுத்து தனது 69வது படத்தில் நடிக்க உள்ளார். வரும் அக்டோபரில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்த படத்தை முடித்துவிட்டு விஜய், தனது கட்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்துவார். வருகிற சட்டசபை தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுவார். அதே நேரத்தில் தனது 69 படத்தை முடிக்காமல் இருந்தால் அதில்தான் தீவிர கவனம் செலுத்துவார் என்பதற்காக இப்படி ஒரு ஸ்டிரைக் அறிவிப்பை தயாரிப்பாளர் சங்கத்தை அறிவிக்க வைத்ததாக, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது உண்மையா, உருட்டா என்பதுதான் தெரியவில்லை.





