தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக நல்ல நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் அமீர். மௌனம் பேசியதே இவரது இயக்கத்தில் வெளியான முதல் படம். அதன்பிறகு ராம் படத்தை இயக்கினார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படம், இன்றும் தமிழ் சினிமாவின் அடையாள படங்களில் ஒன்றாக இருக்கிறது.
தொடர்ந்து இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் வலம் வரும் அமீர், அடுத்ததாக வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறார். ஏற்கனவே வடசென்னை படத்தில் ராஜன் கேரக்டரில் வெற்றிமாறன் இயக்கத்தில் அமீர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் அமீரின் சிஷ்யர்கள்தான் சமுத்திரக்கனி, சசிக்குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் பேசியதாவது, மௌனம் பேசியதே படத்துக்கு பிறகு ஜீவா நடித்த ராம் படத்தை டைரக்ட் செய்தேன். அந்த படத்தின் தயாரிப்பாளரும் நான்தான். அந்த படத்தில் கஜாலா என்ற அழகான பெண்ணை ஹீரோயினாக நடிக்க வைத்தேன். கஜாலாவுக்கு இந்தி இங்கிலீஸ் தவிர வேறு மொழிகள் தெரியாது. தமிழ் சுத்தமாக தெரியாது. ஆனா அவள் பேசுகிற ஆங்கிலம் எனக்கு கொஞ்சமும் புரியாது.
ஆனால் அந்த படத்தின் டைரக்டர் நான்தான். தயாரிப்பாளரும் நான்தான். ஆனால் அழகான கதாநாயகியிடம் 5 நிமிடம் மனம் விட்டு பேச முடியாது. ஆனால் அந்த வாய்ப்பு சசிக்குமாருக்கு தான் கிடைத்தது. சொந்த படம் எடுக்கிறேன். சம்பளம் நான்தான் தர்றேன்.
லாட்ஜ், கார் வசதி எல்லாம் செய்து தர்றேன். ஆனால் அந்த பெண் எப்போதும் என்னுடைய உதவி இயக்குனர் சசிக்குமாரை தான் சசி சசி என அழைத்து பேசிக்கொண்டே இருப்பாள். ஏனென்றால் அவன் கொடைக்கானலில் கான்வென்டில் படித்தவன். அதனால் கஜாலாவும், அவனும் மணிக்கணக்கில் இங்கிலீஷில் பேசிக்கொள்வார்கள். இவன் பேசறதுக்காக நான் படம் எடுத்தேன் என நினைத்துக்கொள்வேன்.
அப்போதுதான் முடிவு செய்தேன். இனி படம் இயக்கினால் தயாரித்தால், தமிழ் பேசும் நடிகைதான் வேண்டும் என தீர்மானித்தேன். சிலர் பருத்திவீரன் படத்துக்கு பிரியாமணி என்றவுடன் அவர் ஒன்றும் அவ்வளவு அழகாக இல்லையே என்றனர். போடா அவருக்கு தமிழில் பேச தெரியும் என்று சொன்னேன்.





