சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் “கங்குவா” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் சூர்யா 5 வேடங்களில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது இத்திரைப்படம் மறு பிறவி கான்செப்ட்டை மையமாக வைத்து உருவாகி வரும் ஒரு வரலாற்று ஃபேண்டசி திரைப்படம் என்று தெரிய வருகின்றது.

சமீபத்தில் சூர்யா பிறந்தநாளில் “கங்குவா” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் மிரண்டுபோயினர். சூர்யாவின் கெட்டப் தாறுமாறாக இருந்தது. அந்த கிளிம்ப்ஸ் வீடியோ இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. சிறுத்தை சிவா இதற்கு முன்பு ஃபேண்டசி திரைப்படங்களை எடுத்ததில்லை. அதே போல் சூர்யாவிற்கும் இது மிக புதிய ஜானர்தான். ஆகையால் இத்திரைப்படத்தின் வெளியீட்டை சினிமா ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இத்திரைப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
“கங்குவா” திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க வெற்றி பழனிசாமி இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு ஆச்சரியமான தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்ற போது கேமரா மேன் வெற்றி, ஒரு பொட்டு லைட் கூட உபயோகிக்கவில்லையாம். லைட்டே இல்லாமல் பல காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தாராம். இத்திரைப்படத்தில் நடிகர் நட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நட்டி ஒரு மிகப் பெரிய கேமரா மேன் என்பதையும் நாம் அறிவோம்.
உடனே நட்டி, வெற்றியை பார்த்து லைட்டே இல்லாமல் எடுக்கிறீர்களே இது சரியாக வருமா? என்று சந்தேகம் கேட்டாராம். அதற்கு வெற்றி அவருக்கு பல தொழில்நுட்ப விஷயங்களை எடுத்து கூறி விளக்கினார். ஆனாலும் நட்டிக்கு நம்பிக்கை வரவில்லையாம். இந்த சந்தேகத்தை சூர்யாவிடம் கூறியிருக்கிறார் நட்டி. அதன் பின் சூர்யாவே வெற்றியிடம் வந்து, “லைட் இல்லாமல் எடுக்கிறீர்களே சரியாக வருமா? “ என கேட்டுள்ளார்.

அதன் பின் இதுவரை எடுத்த காட்சிகளை மொத்தமாக படக்குழுவினருக்கு போட்டுக் காண்பித்தாராம் வெற்றி. அதனை பார்த்த சூர்யாவும் நட்டியும் பிரம்மித்துப்போனார்களாம். அதனை தொடர்ந்து அவர்கள் வெற்றியின் திறமையை பாராட்டினார்களாம்.





