தமிழ் சினிமாவின் வளர்ச்சி என்பது பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே பெரிய வசூலை குவிப்பது மட்டுமல்ல. சகலவிதமான படங்களும் வெற்றி பெறுவதுதான். கடந்த 1980, 90களில் ரஜினி, கமல் போன்ற பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்கள் வெற்றிக்கரமாக ஓடியது என்றால் மற்றொரு புறம் விசு, வி சேகர் ராம நாராயணன் ஆர் சுந்தர்ராஜன் போன்ற இயக்குனர்களின் படங்களும் வெற்றிக்கரமாக ஓடியது.
அந்த காலகட்டத்தில் முரளி பார்த்திபன் சரத்குமார் சத்யராஜ் ராமராஜன் லிவிங்ஸ்டன் ராம்கி பிரபுதேவா என 2ம் நிலை 3ம் நிலை நடிகர்களின் படங்களும் வெளியாகி வெற்றி பெற்றன. எல்லா தியேட்டர்களிலும் எல்லா நடிகர்களின் படங்களையும் ரசிகர்களால் காண முடிந்தது. ஆண்டுக்கு 100 படங்கள் வெளியானாலும் அதில் 75 படங்கள் வெற்றி பெற்றன.
ஆனால் இப்போது பெரிய நடிகர்களின் படங்கள்தான் இயக்கப்படுகின்றன. பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படுகின்றன. சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விட்டனர். காமெடி படங்களை, ஜனரஞ்சக படங்களை தரும் இயக்குனர்களை இப்போது பார்க்க முடியவில்லை. இது தமிழ் சினிமாவின் முடக்கத்தையே வெளிப்படுத்துகிறது.
தமிழ் சினிமாவில் ஏராளமான கதைகள் குவிந்திருக்கின்றன. ஆனால் அதை தயாரிக்க தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் நிறையப் பேர் இருந்தாலும் கமர்ஷியல் என்ற வட்டத்துக்குள் சிக்கியுள்ள நடிகர்கள் அந்த படங்களில், அந்த கதைகளில் நடிக்க தயாராக இல்லை. அதனால் நல்ல கதைகள் படமாக்கப்படாமல், கமர்ஷியல் குப்பை படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமிக்கின்றன.
இதுகுறித்து நடிகர் மணிகண்டன் கூறியதாவது, எனக்கு தெரிந்து இந்த நான்கைந்து மாதங்களில் 150 கதைகள் கிட்ட கேட்டுட்டேன். நான் மட்டுமே இவ்வளவு கதைகள் கேட்டிருக்கிறேன் என்றால் இன்னும் எவ்வளவு நடிகர்கள் இருக்கிறார்கள். 2 ஆயிரம் 3 ஆயிரம் கதைகள் இருக்கு. அதனால் 2 ஹீரோ 5 ஹீரோன்னா வெச்சு படம் பண்ணீட்டு இருப்பாங்க?
இன்னும் 40 ஹீரோ தமிழ் சினிமாவுக்கு வர வேண்டும். சில ஹீரோக்கள் வாங்குகிற சம்பளத்தை அடிப்படையாக வைத்து தமிழ் சினிமாத்துறை இயங்க வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது. அதனால் இன்னும் நிறைய ஹீரோ இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறேன் என்று அந்த நேர்காணலில் நடிகர் மணிகண்டன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





