நடிகர் அஜித்திற்கு கடைசியாக 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று துணிவு திரைப்படம் வெளியானது. அதன் பிறகு அவர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனாலும், அது எதுவுமே வெளியீட்டிற்கு தயாராகவில்லை. இதனால் அஜித்தின் திரைப்படத்தை இரண்டு ஆண்டுகளாக காண முடியாமல் ரசிகர்கள் பரிதவித்து வருகின்றனர்.
இந்தக் குறையை தற்போது நீடிக்கச் செய்திருக்கிறது லைக்கா நிறுவனம். அஜித் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாகத்தான் இருந்தது. இதன் டீசரிலும் அவ்வாறே கூறப்பட்டிருந்தது. இதனால் மகிழ்ச்சி கடலில் அஜித் ரசிகர்கள் திளைத்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பண்டிகை தினத்தில் அஜித் திரைப்படம் வெளியாவதால் அவர்கள் குஷியில் இருந்தனர். ஆனால் இதனை எல்லாம் பொய்யாக்கி விட்டது விடாமுயற்சி படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம். சரியாக புத்தாண்டு பிறக்கும் சமயத்தில் அவசர அவசரமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று கூறியது.
யாரும் எதிர்பாராத நேரத்தில் இந்த அறிக்கை வெளியானதால் அஜித் ரசிகர்கள் நொந்து போனார்கள். ரிலீஸ் தேதியை தள்ளிப் போடுவது என்றாகி விட்டது அதை இரண்டு நாட்களுக்கு பிறகாவது கூறி இருக்கலாமே என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். சிலர் இனி அஜித் ரசிகராக இருந்து என்ன பயன் என்று இணையத்திலும் கருத்து பதிவிட ஆரம்பித்தனர்.
இதனிடையே விடாமுயற்சி திரைப்படத்தின் வருகையால், பொங்கல் ரிலீஸ் இருக்கு சிறு சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகாமல் இருந்து வந்தது. விடாமுயற்சி திரைப்படத்துடன் பாலா இயக்கியிருக்கும் வணங்கான் மட்டுமே மோதும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை தலைகீழாக மாறி இருப்பதால் பொங்கல் தேதியை பலரும் குறி வைத்து வருகிறார்கள்.
குறிப்பாக ஜெயம் ரவி நடித்திருக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதில் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே சங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் நடித்திருக்கும், டென் ஹவர்ஸ் என்னும் திரைப்படமும் பொங்கல் பண்டிகையை குறி வைத்து இருக்கிறது. மெட்ராஸ் காரன் என்னும் படமும் வெளியாகிறது. தருணம் என்னும் படமும் வெளியாக உள்ளது. இருந்தாலும் பொங்கல் பண்டிகைக்கு எந்த ஒரு பெரிய நட்சத்திரத்தின் திரைப்படமும் வெளியாகாமல் இருப்பது ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது.





