மாநகரம், கைதி, மாஸ்டர் திரைப்படங்களை எடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு, பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்த திரைப்படம் விக்ரம். தனது குருநாதர் கமல்ஹாசனை வைத்து இயக்கிய லோகேஷ், அந்த திரைப்படத்தில் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை கூட்டியிருந்தார்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் முகமூடி அணிந்தவர்களால் கொல்லப்பட, அவர்களை கண்டு பிடிப்பதற்காக களம் இறங்குகிறார் பகத் பாசில். அங்கிருந்து காட்சிக்கு காட்சி விறுவிறுப்பான திரைக்கதையை லோகேஷ் கொடுக்க, ஆக்ஷன் சீன்கள் வெறித்தனமாக இருக்க விக்ரம் திரைப்படம் வசூல் மழை பொழிந்தது.
தன்னை விட சிறிய கதாபாத்திரங்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்பை கமல் கொடுத்ததால் முழு சுதந்திரமாக செயல்பட்டார் லோகேஷ். முதல் பாதியில் பகத்திடமே பாதி காட்சிகள் இருக்க, அவரது விசாரணை, ரகசிய காதல், திருமண நிகழ்ச்சி என சுவாரஸ்யமாக படம் சென்றிருக்கும். அதன் நடுவே சந்தானமாக அலற விட்டிருப்பார் விஜய் சேதுபதி. எடிட்டர் பிலோமின் ராஜின் அசத்தலான பணியால், இரண்டாம் பாதியில் திரைக்கதை ஜெட் வேகத்தில் சென்றது.
அதுவும் இறுதி காட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்ட விக்ரம் திரைப்படம், திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கோலம் பூண்டது. தனது முந்தைய திரைப்படமான கைதியையும் சரியான இடத்தில் லோகேஷ் பொருத்தியதால், அவரது எல் சி யூ கான்செப்ட் கோலிவுட்டை தாண்டி பாலிவுட் வரை பேசப்பட்டது.
இந்த எல் சி யூ கான்செப்ட்தான் தற்போது வெளியாக இருக்கும் லியோவில் இருக்குமா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட ஏராளமானோர் இதில் நடித்திருக்க, ஒரு வேளை லியோ எல்சியூ-வுக்குள் வந்தால் யாரெல்லாம் வருவார்கள் என ரசிகர்கள் உற்சாகத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள லோகேஷ், விக்ரம் திரைப்படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட ரோலக்ஸ் கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார். முதலில் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு சூர்யா ஓகே சொல்வார் என்று நான் நம்பவில்லை. அவரிடம் நான் கதையை விவரிக்க, ஒரு நாள் டைம் எடுத்து கொண்ட அவர், ஓகே சொன்னார். இது பற்றி சமீபத்தில் என்னிடம் பேசிய சூர்யா, ரோலக்ஸ் கதாபாத்திரம் வேண்டாம் என்று முடிவு எடுத்துதான் உங்களுக்கு கால் செய்தேன். ஆனால் நீங்கள் செல்போனை எடுத்ததும் ஏன் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என எனக்கு தெரியவில்லை. என்னை நான் பரிசோதிக்கவே ஒப்புக் கொண்டேன். சூர்யா சாரால் அந்த கதாபாத்திரத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்று தெரிவித்தார்.





