அசுரன் திரைப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவதாக இருந்தார். சி சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்னும் குறுநாவலை மையமாக வைத்தே இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதன் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து உற்சாகத்தில் இருக்கிறார்கள், சூர்யா ரசிகர்கள்.
இது தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு செட் போடப்பட்டு, ஜல்லிக்கட்டு தொடர்பான பயிற்சி எடுக்கப்பட்டது. அதில் சூர்யாவும் கலந்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. படத்தில் சூரி நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது போக வாடிவாசல் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீர் நடிக்கப் போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார் வெற்றிமாறன். சூழல் எப்படி இருக்க, வாடிவாசல் திரைப்படத்திற்காக கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டதால் அந்த சிறிய இடைவேளையில் விடுதலை திரைப்படத்தை இயக்க சென்றார் வெற்றிமாறன்.
ஆனால் அது ஆலமரமாக வளர்ந்து இரண்டு பாகங்களாக உருவாகியது. தற்போது இரண்டாம் பாகமும் வெளியாகிவிட்ட சூழலில் மீண்டும் வாடிவாசல் திரைப்படம் குறித்த பேச்சு எழுந்துள்ளது. சூர்யா தற்போது தனது 45 வது திரைப்படத்திற்காக ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இப்படி இருக்க அவர் அடுத்ததாக வெற்றிமாறன் உடன் இணைவாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதற்கு அண்மையில் அளித்த பேட்டி மூலம் பதில் அளித்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு. அதில், அண்மையில் கூட நான் வெற்றிமாறனை சந்தித்தேன். அப்போது சூர்யாவுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி விடலாமா என்று கேட்டேன். அவர் எந்த மறுப்பும் இன்றி உடனே ஓகே சொல்லிவிட்டார். விரைவில் இதற்கான பணிகளை ஆரம்பிக்க இருக்கிறோம்.
ஏற்கனவே வாடிவாசல் திரைப்படத்திற்கான ஆடியோ உரிமம் 10 கோடிக்கு விற்று விட்டது. அப்போதைய தேதிக்கு அந்த தொகை மிகப்பெரிய விஷயம் தான். இதை செல்போனில் தொடர்பு கொண்டு ஜீவி பிரகாசிடம் கூறினேன். வெற்றிமாறனை போல கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடியவர்கள் யாருமே இல்லை. அவரிடம் மிகப்பெரிய நிறுவனங்கள் ஏன் சன் பிக்சர்ஸ் முதற்கொண்டு படம் எடுக்க கேட்டார்கள். ஆனால் அவரோ வாடிவாசலை முடித்து விட்டு வருகிறேன் என்று கூறியிருக்கிறார் என கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார்.





