விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. குறிப்பாக மாநகரம் படத்திலிருந்து விக்ரம் படம்வரை தொடர்ச்சியாக ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு இந்தப் படம் முதல் சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அளவுக்கு படத்தின் கதையிலும், திரைக்கதையிலும் சொதப்பி வைத்திருக்கிறார் என்கின்றனர் ரசிகர்கள்.
இருந்தாலும் லியோ திரைப்படம் முதல் நாளில் 148 கோடி ரூபாயும் முதல் வார முடிவில் 461 கோடி ரூபாயும் வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதற்கிடையே லியோ ரிலீஸுக்கு முன்னதாக சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக லியோ படத்தின் வசூல் ஜெயிலர் படத்தின் வசூலை தாண்டும் என அறுதியிட்டு கூறிவந்தனர்.
ஆனால் அந்த சமயத்தில் பேட்டி கொடுத்த நடிகர் மீசை ராஜேந்திரன் லியோ படம் மட்டும் ஜெயிலர் படத்தின் வசூலை தாண்டட்டும், 1000 கோடி ரூபாய் வசூலிக்கட்டும் நான் எனது மீசையை எடுத்துக்கொள்கிறேன் என பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், “ஜெயிலர் திரைப்படத்துக்கு அனைத்து வயதினரும் வந்தார்கள். அதேபோல் படம் 650 கோடி வசூலித்துவிட்டது என்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதை வைத்துதான் லியோ திரைப்படம் அவ்வள்வவு வசூலை எட்டாது என்று சொன்னேன். அப்போது சவால் விடுங்கள் என்று ஒரு யூட்யூபர் சொன்னதால் நான் மீசையை எடுத்துக்கொள்கிறேன் என்றேன். அதன் பிறகு எனது வீட்டில் இருப்பவர்களே ஏன் இப்படி பேசுறீங்க என திட்டினார்கள். நான் விஜய்யுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். நான் ரஜினிக்கு சொம்பு தூக்கவில்லை. உண்மையைத்தான் பேசுகிறேன்.
நான் மீசையை எடுத்துவிடுகிறேன் என சொன்னதும் பலர் என்னை மோசமாக விமர்சித்தார்கள். விஜய்யின் தீவிர ரசிகை ஒருவர் அவருடைய (மீசை ராஜேந்திரன்) மீசையை எடுக்கக்கூடாது. அவரின் விரலைத்தான் வெட்ட வேண்டும் என்று சொல்கிறார். என்னிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை. முதல் நாளில் லியோ படம் 148 கோடி வசூலித்ததாக சொல்வார்கள் பத்தாவது நாளில் 1000 கோடி ரூபாய்னு சொல்வார்கள்” என்றார்.





