தமிழ் சினிமாவில், அழகான இளமையான சில நடிகைகள் எளிதில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து விடுகின்றனர். அந்த வகையில் சமுத்திரக்கனி நடித்த சாட்டை படம் மூலம், ரசிகர்களிடம் அறிமுகமானவர் மஹிமா நம்பியார். கேரளாவைச் சேர்ந்த இவர், தன் வசீகரிக்கும் அழகால், முதல் படத்திலேயே ரசிகர்களிடம் மனம் பிடித்தார்.
கேரளாவை சேர்ந்தவராக மஹிமா நம்பியார் இருந்தாலும், தமிழ் படங்களில் நடிக்க அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து தமிழில் அவர் பல படங்களில் நடித்தார். குற்றம் 23, அகத்திணை. கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்ணன், அண்ணனுக்கு ஜே, மதுர ராஜா, மகாமுனி, அசுர குரு, ஐங்கரன், ஓ மை டாக், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
சாட்டை படத்தில், பள்ளி மாணவியாக அப்பாவித்தனமான கேரக்டரில் நடித்த மஹிமா, தொடர்ந்து நல்ல நல்ல கேரக்டர்களில் நடித்து வருகிறார். இதில் மகாமுனி படத்தில், சிறந்த நடிப்பை வழங்கி இருந்தார். இதுதவிர மலையாளத்திலும் இவர் சில படங்களில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் இரண்டிலும் பிஸியான நடிகையாக இருக்கிறார்.
வரும் 6ம் தேதி, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட 800 என்ற படம் வெளியாகிறது. அதற்கான பிரமோசன்களில், படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 800 படம் குறித்த நேர்காணல் ஒன்றில் நடிகை மஹிமா நம்பியார் தனது சினிமா பயணம் குறித்து பேசினார்.
அந்த நேர்காணலில் மஹிமா நம்பியார் கூறியதாவது, பல படங்களில் தொடர்ந்து நல்ல கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. எந்த படத்தில் நடித்தாலும், அந்த படம் குறித்து பேசுகையில் இந்த நடிகருடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது, என்று என்னிடம் கேள்வி கேட்கின்றனர். தயவு செய்து, அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்காதீர்கள். அதற்கு பதில் சொல்லி சொல்லி அலுத்து போய் விட்டது. போரடிக்கிறது.
ஒரு நடிகருடன் நடித்த அனுபவம் என்பது, நன்றாக தான் இருக்க போகிறது. இல்லை, நல்லா இல்லை என்று யாராவது சொல்லப் போகிறார்களா, அது தேவையில்லாத ஒரு கேள்வி. என்னிடம் மட்டுமல்ல, எந்த ஹீரோயினிடமும் கேட்க அவசியமில்லாத அந்த கேள்வியை கேட்கக் கூடாது, என்று கூறி இருக்கிறார் மஹிமா நம்பியார்.





