தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக விஜய்க்கு மக்கள் மத்தியில் கிடைத்துவரும் ஆதரவும், வரவேற்பும் பெரிய லெவலாக இருக்கிறது. இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக அவர் அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல்வர் நாற்காலியில் அமர அவர் லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே தற்போது தளபதி 69 என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பிரகாஷ் ராஜ் பிரியாமணி மமிதா பைஜூ நரேன் கௌதம் மேனன் பாபி தியோல் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். வரும் அக்டோபரில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். வெங்கட்பிரபு இயக்கிய இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். வசீகரா படத்துக்கு பிறகு இந்த படத்தில் விஜய்க்கு சினேகா ஜோடியாக நடித்திருந்தார். 2024ம் ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் 445 கோடி ரூபாய் வசூலித்து முதலிடம் பிடித்தது தி கோட் படம்தான்.
நடிகர் விஜய், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27ம் தேதி நடத்திய அரசியல் மாநாடு, பெரிய அளவில் வைரலானது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் டிசம்பர் 6ம் தேதி எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழாவிலும் விஜய் பேசியது பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் வருகிற 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. தெலுங்கில் உருவான இந்த படம் தமிழிலும் வெளிவருகிறது. கேம் சேஞ்சர் படம் பிரமோஷன்களில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜூதான் கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் விஜய் நடித்த நண்பன் படத்தை இயக்கிய வகையில் விஜய்க்கும், ஷங்கருக்கும் நெருங்கிய நட்புண்டு. அதனால் வருகிற 7ம் தேதி சென்னையில் கேம் சேஞ்சர் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடக்க உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினாக லோகேஷ் கனகராஜ் பங்கேற்க உள்ளார். அதே போல் நடிகர் விஜயும் இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ராம் சரண், தயாரிப்பாளர் தில்ராஜூ, இயக்குனர் ஷங்கர் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். ராம்சரண் போனில் அழைத்து, விஜயிடம் இந்த விழாவில் நீங்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.





