இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வரும் 10ம் தேதி கேம் சேஞ்சர் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியசேன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் தில் ராஜூ பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் தெலுங்கு தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வௌியாகிறது.
இந்த படத்தின் பிரமோசன் பணிகளில் படக்குழு கடந்த சில வாரங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ இயக்குனர் ஷங்கர், நடிகர் ராம்சரண், வில்லன் கேரக்டரில் நடித்துள்ள எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று படம் குறித்த வைப்பை ரசிகர்களிடம் அதிகரித்து வருகின்றனர்.
இந்த படத்தில் நடிகை அஞ்சலி நடித்துள்ளார். அதே போல் இந்தி நடிகை கியாரா அத்வானியும் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகையாக இருப்பவர். தெலுங்கில் முதன் முறையாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் வருகிறார். அதில் ஒருவருக்கு கியாரா அத்வானியும், மற்ற ஒருவருக்கு அஞ்சலியும் ஜோடியாக நடித்துள்ளதாக தெரிகிறது.
இந்த சூழலில், கேம் சேஞ்சர் பட பிரமோசன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ராம் சரண் இயக்குனர் ஷங்கர் தில் ராஜூ எஸ்ஜே சூர்யா போன்றவர்கள் பங்கேற்று வரும் நிலையில், படத்தின் நாயகி கியாரா அத்வானி பங்கேற்காமல் மிஸ் ஆகி வருவது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏதேனும் சம்பள பிரச்னையா, அல்லது சென்டிமென்ட் காரணமாக அவர் வருவதில்லையா என்ற கேள்வியும் எழுந்தது.
கியாரா அத்வானிக்கு உடல்நலம் சரியில்லை என்றும், அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு தகவல் பரவியது. ஆனால் இந்த தகவலை கியாரா அத்வானியின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நடிகை கியாரா அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அவருக்கு தொடர்ந்து வேலைகள் இருந்ததால், அதனால் பயங்கரமான சோர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். அதன் காரணமாக தான் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ளவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.





