நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர். விஜயகாந்த் ஹீரோவாக பிஸியாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் சத்யராஜ். இவர் 1980களில் வெளியான பல படங்களில் ரஜினி கமலுக்கு வில்லனுக்கு நடித்திருந்தார்.
அதே போல் அப்போது வளர்ந்து வரும் நடிகராக பல படங்களில் பிஸியாக விஜயகாந்தும் நடித்துக்கொண்டு இருந்தார். அதனால் விஜயகாந்த் நடித்த சில படங்களிலும் சத்யராஜ் அவருக்கு வில்லனாக நடித்திருக்கிறார். அப்போது ஈட்டி படம் ஷூட்டிங்கில் நடந்த ஒரு சம்பவம் குறித்து சத்யராஜ் ஒரு விழாவில் பேசியிருக்கிறார்.
நடிகர் சத்யராஜ் அந்த விழாவில் பேசியதாவது, ஈட்டி என்று ஒரு படம். அந்த படத்தின் ஷூட்டிங் முதுமலையில் நடந்தது. நான்தான் வில்லன், விஜயகாந்த் தான் கதாநாயகன். அந்த படத்தில் வரும் ஒரு காட்சியின் படி யானை வந்து என்னை தொரத்தணும். விஜயகாந்த் வந்து என்னை காப்பாத்தணும். அதுதான் சீன்.
முதுமலையில் ஒரு யானையை கொண்டு வந்து வெச்சிருக்காங்க. ஆனா அந்த யானை என்னை தொரத்தவே மாட்டீங்குது. யானை வேற தொரத்த மாட்டீங்குது, டைம் வேற ஆகிட்டே இருக்குது. என்ன பண்றதுன்னே தெரியலை. அப்போ விஜயகாந்த் கூப்பிட்டு எனக்கு ஒரு ஐடியா சொன்னார்.
சத்யராஜ், வெல்லத்தை கையில் எடுத்துக்குங்க, அதை யானைகிட்ட கொண்டு போய் காட்டுங்க. வெல்லத்தை யானை பார்த்துரும். யானைக்கு கரும்பு சர்க்கரை வெல்லம் எல்லாம் ரொம்ப புடிக்கும். வெல்லத்தை யானைகிட்ட காட்டி நல்லா எஸ்டாபிளிஷ் பண்ணிட்டீங்கன்னா, நீங்க ஓட ஆரம்பிக்கும்போது அது தொரத்த ஆரம்பிக்கும். ஓட ஓட கையில் இருக்கிற வெல்லத்தை வீசிடுங்க என்று ஐடியா கொடுத்தார்.
நல்லா ஐடியா தான் விஜி. ஆனா யானை தொரத்த ஆரம்பிச்சதுக்கு அப்புறம் வெல்லத்தை நான் வீசியதை கவனிக்காம வெல்லம் இன்னும் இவன் கையில்தான் இருக்குதுன்னு யானை நெனைச்சா என் கதை என்னாகும்ன்னு கொஞ்சம் யோசிச்சுபாருங்க என்று விஜயகாந்திடம் சொன்னேன். அதற்கு விஜயகாந்த் விழுந்து விழுந்து ரொம்ப நேரம் சிரித்தார் என்று, அந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலகலப்பாக பேசியிருக்கிறார். இந்த விழாவில் விஜயகாந்தும் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





