ஆக்சன் காட்சிகளை தூக்கலாகவும், திரைக் கதையை விறுவிறுப்பாகவும் அளிக்கக்கூடிய இயக்குனர்களில் மிக முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியான, மாநகரம் கைதி விக்ரம் மாஸ்டர் லியோ ஆகிய ஐந்து திரைப்படங்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தன. இதில் லியோ மற்றும் மாஸ்டர் என இரண்டு திரைப்படங்களும் இரண்டாம் பாதி சரியில்லை என்று பலரும் கூறினார்கள்.
லியோ படத்தின் இரண்டாம் பாதி திட்டமிட்டபடி வரவில்லை என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.
இதன் படப்பிடிப்பு தற்போது 70% முடிவடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் இதன் காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தில் ரஜினிகாந்த்திற்கு தேவா எனும் கதாபாத்திரத்தை வழங்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதுபோக நாகர்ஜுனா சத்யராஜ் ஸ்ருதிஹாசன் உபேந்திரா உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார்கள்.
இதில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பதும் உறுதியாகி இருக்கிறது. ஜெய்ப்பூரில் நடத்தப்பட்ட படப்பிடிப்பில் அவர் இடம்பெற்றுள்ளார். இதில் அமீர்கானுக்கு கேமியோ ரோல் என்று சொல்கிறார்கள். தனது முந்தைய திரைப்படங்களில் எப்போதும் போதைப்பொருள் கடத்தலையே லோகேஷ் கனகராஜ் மையப்படுத்தி இருப்பார். அப்படி இல்லை என்றாலும் ஏதாவது ஒரு காட்சியில் போதைப்பொருள் வந்துவிடும்.
ஆனால் இந்தக் கதையில் அது இருக்கக் கூடாது என்பதில் லோகேஷ் கனகராஜ் தெளிவாக இருக்கிறாராம். இதற்காக தங்க கடத்தலை இந்த படத்தில் கையில் எடுத்திருக்கிறார். அண்மையில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் பாடலுக்கான டீசர் வெளியாகி பலரது வரவேற்பையும் பெற்றது. குறிப்பாக அதில் ரஜினிகாந்தின் நடனம் பலரையும் கவரும் வகையில் அமைந்தது.
அனேகமாக கூலி திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில், லோகேஷ் கனகராஜ் அளித்திருக்கும் பேட்டியில் அவர் அஜித்துடன் இணைவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கு பதில் அளித்த இயக்குனர், நிச்சயம் அவருடன் பணி புரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது நிறைவேறும் என நம்புகிறேன் என்றும் கூறியிருக்கிறார். இது மட்டும் நடந்து விட்டால் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் அஜித் விஜய் என நான்கு நட்சத்திரங்களுடன் பணிபுரிந்த இயக்குனர் என்னும் பெருமையை லோகேஷ் கனகராஜ் பெறுவார்.





