நடிகர் அஜீத்குமார் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட்பேட் அக்லி என 2 படங்கள் இந்த ஆண்டில் ரிலீஸாக உள்ளன. வருகிற ஏப்ரல் 10ம் தேதி குட்பேட் அக்லி ரிலீஸ் செய்யப்படுவதாக படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே அறிவித்து விட்டார். விடாமுயற்சி படம் வருகிற 23ம் தேதி அல்லது 30ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் அஜீத்குமாரை பொருத்த வரை அடுத்தடுத்த படங்களில் நடிப்பதோ, நிறைய சம்பாதிப்பதோ மற்ற நடிகர்களுடன் போட்டி போடுவதோ போன்ற ஆர்வம் கிடையாது. அவருக்கு விருப்பமான படங்களில் நடிக்கிறார். வெற்றி தோல்விகளை சமமாக பார்க்கிறார். அதே நேரத்தில் கார் ரேஸ் பைக் ரேஸ் துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.
துபாயில் துவங்கியுள்ள 24எச் கார் பந்தய போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜீத்குமார், பயிற்சியின் போது திடீர் விபத்தில் சிக்கினார். அதிர்ஷடவசமாக காயமின்றி உயிர் தப்பிய அவர், கார் ரேஸிங் போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. எனினும் அஜீத்குமார் கார் ரேஸிங் அணியின் தலைவராக அவர் நீடிப்பார். ஆனால் போட்டிகளில் ஓட்டுனராக கலந்துக்கொள்ள மாட்டார்.
இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களுக்காக பேசிய வீடியோவில் நடிகர் அஜீத்குமார் கூறியிருப்பதாவது, ரசிகர்களே, சண்டை போடாதீங்க, வாழ்க்கை என்பது ரொம்பவும் குறுகியது. சந்தோஷமா இருங்க, உங்க குடும்பத்தை பாருங்க.
துபாயில் நடந்த இந்த கார் ரேஸை பார்க்க நிறைய ரசிகர்கள் நேரில் வந்திருந்தாங்க. இது எனக்கு ரொம்பவும் எமோஷனலாக இருந்தது. நான் சொல்லப் போற விஷயம் ஒண்ணே ஒண்ணுதான். நீங்க எல்லோரும் சந்தோஷமா ஆரோக்கியமா மன நிம்மதியோடு வாழணும். கடவுளை வேண்டிக்கிறேன்.
நேரத்தை வீணாக்காதீங்க. நல்லா படிங்க. வேலைக்கு போறவங்க கடுமையா உழைச்சு வேலை பாருங்க. நமக்கு பிடிச்ச விஷயத்துல நாம் வெற்றியடைஞ்சா அது சந்தோஷம்தான். அதற்காக வெற்றி கிடைக்காத போது சோர்ந்து போயிடாதீங்க. வில்பவர் டெடிகேசன் அதை ரெண்டையும் விட்டுக் கொடுக்காதீங்க. உங்கள் எல்லாேருக்கும் என் அன்பு வாழ்த்துகள். அவங்கவங்க கடமையை ஒழுங்காக செய்தாலே போதும். நல்ல ரிசல்ட் தானாகவே வரும் என்று அந்த வீடியோவில் அஜீத்குமார் பேசியிருக்கிறார்.





