சினிமா அரசியல் விளையாட்டு என எந்த துறையாக இருந்தாலும் அதில் ஆரோக்கியமான போட்டி இருப்பதே அந்த துறையின் வளர்ச்சிக்கு பல விதங்களில் உதவும். ஆனால் ஆரோக்கியமான போட்டி என்பது இன்றைய சுயநலம் மிகுந்த காலகட்டத்தில் பொறாமையாக மாறியிருக்கிறது.
அடுத்த வீட்டுக்காரர்களை பார்த்து பொறாமைப்படும் காலம் மாறி, இப்போது குடும்பத்துக்குள் வாழும் மனித உறவுகளுக்குள் மறைமுகமான போட்டிகள் துவங்கி, இப்போது பொறாமையாக, ஈகோவாக மாறி சமுதாயத்தில் பல குடும்பங்களை சீரழித்துக்கொண்டு இருக்கிறது. இதுபற்றிய கதைக்களங்களில் நிறைய படங்கள் வெளிவந்திருக்கின்றன.
ஆனால் தமிழ் சினிமாவை பொருத்த வரை ஆரோக்கியமான போட்டியே நிலவுகிறது. இந்தி தெலுங்கு போன்ற பிறமொழி சினிமாக்களில் அதிக பொறமை, போட்டி, ஈகோ காணப்படுகிறது. சமீபத்தில் கேம் சேஞ்சர் படத்துக்கு கூட தெலுங்கில் 2 முக்கிய நடிகர்கள் மறைமுகமாக உள்ளடி வேலை செய்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் மணிகண்டன். காதலும் கடந்து போகும் காலா ஜெய்பீம் குட்நைட் லவ்வர் என சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக மாறியிருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்து குடும்பஸ்தன் என்ற படம் வரும் 24ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இந்த விழாவில் நடிகர் மணிகண்டன் பேசியதாவது, குடும்பஸ்தன் படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஒரு அட்வென்சர் கதை எழுத தான் முதலில் நினைத்தார். ஆனால் இன்றைய தேதியில் ஒரு குடும்பம் நடத்துவதே பெரிய அட்வென்சர் என்பதால் அதையே படமாக்கி இருக்கிறார். படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் பல வழியில் இது கனெக்ட் ஆகும். குரு சோமசுந்தரத்தின் பாட்டல் ராதா படமும் குடும்பஸ்தன் படத்தோடு வெளிவருகிறது.
நான் ஒரு படம் பார்த்து எமோஷனல் ஆகிய அழுவது அரிது. அது பாட்டல் ராதா படத்தில் நடந்திருக்கிறது. அவருக்கும் வாழ்த்துகள். குடும்பஸ்தன் படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சினிமாவில் சின்ன பெயர் எடுக்கவே பெரிய உழைப்பு தேவையாி இருக்கிறது. நான் செய்த சின்ன வேலைகளுக்கு எல்லாம் பெரிய பாராட்டு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. இந்த படமும் உங்களுக்கு பிடிக்கும் என்று மணிகண்டன் தனது பட விழாவில் பாட்டல் ராதா படம் குறித்தும் பிரமோசன் செய்து பேசியிருக்கிறார்.





