தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் வட இந்தியாவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஆகிப்போனவர்கள். கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாது மிகச் சிறந்த கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர்கள். குறிப்பாக தமிழ் சினிமாவில் இருவருக்குமே ஒரு நல்ல இடம் உண்டு.

தற்போது தமன்னா தமிழில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்துள்ளார். அதே போல் காஜல் அகர்வால் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் BOFTA தனஞ்சயன் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “ஒரு நல்ல நடிகை இருந்தால் நாம் அவரை நிச்சயமாக கொண்டாடுவோம். உதாரணத்திற்கு துசாரா விஜயனை எடுத்துக்கொண்டால், அவர் மிக பிரமாதமாக நடிக்கிறார். அவர் ஒரு தமிழ் பெண். இது போன்ற நிறைய தமிழ் பெண்களுக்கு நாம் வாய்ப்பு தரவேண்டும். ஆனால் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்றால், எப்படியாவது பார்க்க அழகாக இருந்தால் போதும், தமிழே தெரியாத பெண்ணை எதிர்பார்க்கிறோம்.

தமிழே தெரியவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை, வட இந்தியாவில் இருந்து ஒரு பெண்ணை அழைத்து வந்து நடிக்க வைக்கலாம் என்று நினைக்கிறோம். சமீபத்தில் எனது நண்பனின் திரைப்படத்தில் ஒரு வட இந்திய பெண் நடித்திருந்தார். அந்த பெண்ணுக்கு அந்த படத்தில் குளோஸ் அப் ஷாட் ஒன்று கூட கிடையாது. ஏனென்றால் அந்த பெண்ணுக்கு தமிழ் தெரியவில்லை. அவரால் தமிழ் பேசவே முடியவில்லை. ஆதலால் அது துருத்திக்கொண்டு தெரியக்கூடாது என்பதற்காக அதனை மேனேஜ் செய்யும் வகையில் குளோஸ் அப் ஷாட்டை தவிர்த்திருக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு சுத்தமாக நடிப்பே வரவில்லை.

நான் இயக்குனர்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். எதற்கு தமிழ் தெரியாத பெண்களை அழைத்து வந்து நடிக்க வைக்கிறீர்கள்? நாம் எத்தனை கிளாமரான ஹீரோயின்களை நடிக்க வைத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் தமிழ் பேசுகிறார்களா என்ன?

உதாரணத்திற்கு காஜல் அகர்வால் தமிழில் எத்தனை ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார்கள். அவர் கொஞ்சமாவது தமிழ் பேசுவதற்கு மெனக்கெட்டிருக்கிறாரா? இந்த விஷயத்தில் நான் தமன்னாவை பாராட்டுவேன். அவர் தமிழ் பேச முயற்சி செய்கிறார்” என்று அப்பேட்டியில் கூறியுள்ளார்.





