தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ரவி மோகன். சமீபத்தில் தனது ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டுள்ளார். தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்த வந்த நடிகர் ரவி மோகனுக்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படங்களாகவே இருக்கின்றன. இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
நடிகர் ரவிமோகன் இப்போது சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்கி இருக்கிறார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற அந்த நிறுவனத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் கார்த்தி சிவகார்த்திகேயன் மணிகண்டன் சிவராஜ்குமார் யோகிபாபு ஜெனிலியா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் படங்களை தயாரிக்கும் ரவிமோகன், யோகிபாபு நடிக்கும் ஒரு படத்தை டைரக்ட் செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரவி மோகன் ஸ்டுடியோஸ் துவக்க விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்குவது, அதை நிர்வகிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதே போல் இயக்குனராகவும் ரவி மோகன் களத்தில் இறங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவரிடம் நிறைய உழைப்பு பேஷன் திறமை இருக்கிறது. அதனால் அவர் ஜெயிப்பது நிச்சயம்.
ரவி மோகன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கிறார் என்பதே எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது. காமெடி நடிகராக மட்டுமே யோகிபாபுவை நான் பார்ப்பது இல்லை. அவர் மிக திறமையான நடிகர். நடிப்பில் அழுத்தமான பெர்மான்ஸ் பண்ணக் கூடியவர். அவரது நடிப்பில் ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் படம் வேற லெவலில் இருக்கும் என்று நம்புகிறேன்.
தன்னிடம் உள்ள உணர்வுகளை கலை அழகை இயக்கும் திறமையை வெளிப்படுத்தவே ரவி மோகன் இயக்குனராக மாறியிருக்கிறார். நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் அவருக்குள் நிறைய விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன. நடிகர் ரவி மோகனை போலவே அடுத்ததாக நடிகர் கார்த்தியும், நடிகர் மணிகண்டனும் விரைவில் இயக்குனர்களாக மாறி விடுவார்கள்.
ஏனெனில் அவர்களுக்குள் அதற்கான விதைகள் இருக்கின்றன. நடிகர்கர் கார்த்தி, மணிகண்டன் போன்றவர்களும் விரைவில் இயக்குனர்கள் ஆவார்கள். அப்படி அவர்கள் இயக்குனர்களாக மாற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இதுபோன்ற தயாரிப்பு நிறுவனங்கள் நடிகர்கள் உருவாக்குவது திறமையான இயக்குனர்களுக்கு வாய்ப்பும் அவர்களுக்கு வாழ்க்கையும் உருவாக்கி தரும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த விழாவில் பேசினார்.





